ரஜினிகாந்த் மீது காவல்துறையில் புகார்

தாமிர (ஸ்டெர்லைட் ) ஆலைக்கு எதிராக 22-5-2018 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த, தமிழர் அறப்புரட்சி போராட்டத்தில், விசக்கிரிமிகள், தீயசக்திகள், தீவிரவாதிகள் புகுந்து காவல்துறையினரைத் தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு நடத்தவேண்டியதாயிற்று என 30-5-2018 அன்று தூத்துக்குடியிலும் சென்னையிலும் திருவாய் ? மலர்ந்த திரைப்பட நடிகர் மராட்டிய இரஜினிகாந்தை , துப்பாக்கிச்சூடு கொடும் நிகழ்வு குறித்து அமைக்கப்பெற்ற மாண்புமிகு நீதியரசர் அருணாஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையம் அழைப்பாணை விடுத்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து மாண்புமிகு ஆணையத்தில் நேரில் வாதுரைத்து வென்றது தமிழர் விடுதலைக் கொற்றம் அமைப்பு.

அதையொட்டி அருணா ஜெகதீசன் ஆணையம் விடுத்த அழைப்பாணைக்கு, நடிகர் இரஜினிகாந்த்,”தான் அங்கு வந்தால் இரசிகர்கள் கூட்டம் கூடி சட்டம் ஒழுங்கு கெடும்” எனச் சொல்லி நேர்நிற்பதிலிருந்து விலக்குப் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டு அரசால் சட்டப்படி அமைக்கப்பெற்ற ஆணையத்தையே மிரட்டுவது போல் பதிலளித்த இரஜினிகாந்தை, காவல்துறை நேரில் சென்று விசாரிக்க வேண்டுமென 2-3-2020 -திங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு (புகார் ) செய்யப்பட்டது.

அதுபோல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் முறையீடு பதிவஞ்சலில் விடுத்து வைக்கப் பெற்றுள்ளது.

ஆணையத்தில் நேர்நிற்க வரும் சூழலில் அவர் தனது இரசிகர்களை அழைத்து வந்து ஏதாவது கலவரம் செய்தால் அதனால் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் நடிகர் இரஜினிகாந்தே பொறுப்பேற்க வேண்டுமென அந்த முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழர் விடுதலைக் கொற்றத்தைச் சேர்ந்த வியனரசு கூறியிருப்பதாவது, இதுபோன்று இரஜினிகாந்து மீது மற்றெவரும் முறையீடு செய்யவில்லை. மேலும் நாம் சிறைமீண்டு வந்த காலத்தில் இதே இரஜினிகாந்த் மீது தூத்துக்குடி தொழிற்பேட்டையில் காவல் நிலையத்திலும் ஓர் முறையீட்டை அன்றே செய்து வைத்துள்ளோம்.

என்நிலையிலும் அவரை விடப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response