மாநிலங்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது உறுப்பினர்களாக இருக்கும் 55 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப் பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக் காலமும் நிறைவடைகிறது

இந்த காலி இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக வருகிற 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் 6 ஆம் தேதி தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய 13 ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் தற்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு இருந்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், இரு கட்சிகளும் தலா 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்து மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும்.

இந்த நிலையில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கூறி உள்ளார்.

திருச்சி சிவா, ஏற்கனவே 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். தலைசிறந்த பேச்சாளர். சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியும் ஆவார். மாணவப் பருவத்திலேயே தி.மு.க. மாணவர் அணியில் சேர்ந்து கட்சி தொண்டாற்றியவர். 1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது மிசாவில் கைது செய்யப்பட்டார். தற்போது, தி.மு.க.வில் கொள்கை பரப்புச் செயலாளராக உள்ளார்.

அந்தியூர் செல்வராஜ், தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராகப் பதவி வகித்தார். இவர், தி.மு.க.வில் ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளராக இருந்து வருகிறார்.

என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் சோழிங்கர் ஆகும். தி.மு.க. தலைமைக்கழக சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார். இவருக்கு வயது 53.

Leave a Response