இன்று தொடங்குகிறது பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு – 8,16,359 பேர் எழுதுகிறார்கள்

2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 இலட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

பழைய பாடத்திட்டத்தில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 10 ஆயிரத்து 683 தனித் தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) பழைய பாடத்திட்டத்தில் 5 ஆயிரத்து 828 தனித்தேர்வர்களும், புதிய பாடத்திட்டத்தில் 2 ஆயிரத்து 655 நேரடி தனித்தேர்வர்களும் என மொத்தம் 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 இலட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 612 பேர். மாணவிகள் 3 இலட்சத்து 74 ஆயிரத்து 747 பேர். மாணவிகளை விட மாணவர்கள் 66 ஆயிரத்து 865 பேர் அதிகம். தனித்தேர்வர்களில் 6,581 பெண்களும் 12,583 ஆண்களும் மற்றும் 2 திருநங்கைகளும் தேர்வு எழுத உள்ளனர்.

சென்னையில் 410 பள்ளிகளில் இருந்து 160 தேர்வு மையங்களில் 25,547 மாணவர்கள், 21,717 மாணவிகள் என மொத்தம் 47 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகிறார்கள். புதுச்சேரியில் 149 பள்ளிகளில் இருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 958 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 68 புதிய மையங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன.

தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 4 இலட்சத்து 54 ஆயிரத்து 367 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுத உள்ளனர்.

வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.

‘டிஸ்லெக்சியா’ பாதிப்புள்ள மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப்பாட விலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) அரசு தேர்வுத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைத்தளத்தில் தேர்வு எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதவுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. அந்த சீட்டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு உள்ளன. அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாள் மற்றும் முகப்பு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். அக்குழுவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக்கல்வி அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்வு மைய வளாகத்துக்குள் கைபேசி எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் கைபேசி வைத்திருக்கக்கூடாது. இதை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ கைபேசி மற்றும் இதர தகவல் தொடர்புச் சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்வு எழுதும்போது துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாளை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையத்தை இரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை இரத்து செய்திடவும் பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத்தேர்வுகள் தொடர்பாக சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெற அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். 93854 94105, 93854 94115, 93854 94120 ஆகிய எண்களில் இந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response