நியூசிலாந்துக்கு எதிரான ஐந்துநாள் போட்டி – ஏமாற்றிய விராட்கோலி

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட ஐந்துநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஐந்துநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் இந்திய வீரர்கள், நியூசிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.

தொடக்க வீரர் பிரித்வி ஷா ( 54 ரன்கள்), புஜாரா (54 ரன்கள்), ஹனுமா விஹாரி (55 ரன்கள்) ஆகியோரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை.

கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி (3 ரன்கள்) இந்தப் போட்டியிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். எதிர்பார்க்கப்பட்ட ராகனே 7 ரன்களில் வெளியேறினார். இளம் வீரர் ரிஷாப் பான்ட் 12 ரன்கள் மட்டுமே அடித்தார்.

63 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் நியூசிலாந்து அணி தரப்பில், கைல் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்பின் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

Leave a Response