உலக தாய்மொழி நாள் இன்று – தமிழக முதல்வர் வாழ்த்து

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பிப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இன்று உலக தாய்மொழி தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியைப் போற்றிப் பாதுகாத்திடும் வகையில், உலக தாய்மொழி தினமான இன்று, தமிழ் மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்திடும் விதமாக மாநில அளவில் கவியரங்கம், கருத்தரங்கம் போன்றவை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனைப் பேணிக் காத்திடும் வகையிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அன்றைய தினத்தை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலக தாய்மொழி தினமான இந்த இனிய நாளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்

Leave a Response