நித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டிஸ் – அப்படி என்றால் என்ன?

சர்ச்சை சாமியார் நித்யானந்தா, இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து 2 சிறுமிகளைக் காணவில்லை என்று 2019 நவம்பர் மாதம் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஒரு சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் கொடுத்தார்.

அதனடிப்படையில், ஆசிரமத்துக்கு நன்கொடை திரட்டுவதற்காக, சிறுமிகளைக் கடத்தி வந்து ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக நித்யானந்தா மீது குஜராத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, நித்யானந்தா தலைமறைவானார். அவர் ஈகுவடார் நாட்டின் அருகே ‘கைலாசா’ என்ற தனிநாடு உருவாக்கி வசிப்பதாக தகவல் வெளியானது. அவரை ‘தேடப்படும் நபர்’ என குஜராத் காவல்துறையினர் அறிவித்தனர்.

மேலும், அவரைப் பற்றிய தகவல் சேகரிப்பதற்காக, அவருக்கு எதிராக ‘புளு கார்னர்’ நோட்டீஸ் அனுப்ப சர்வதேச காவல்துறையை (இன்டர்போல்) அணுகுமாறு சி.பி.ஐ.யை கேட்டுக்கொண்டனர். சி.பி.ஐ.யும் சர்வதேச காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்தது.

அதன் அடிப்படையில், நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச காவல்துறை ‘புளு கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்தத் தகவலை ஆமதாபாத் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கே.டி.கமரியா தெரிவித்தார். இதற்கு அடுத்தபடியாக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

புளுகார்னர் நோட்டிஸ் என்றால் என்ன?

குற்ற வழக்கில் தேடப்படும் ஒருவரின் அடையாளம், இருப்பிடம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து வெளிநாடுகளிடம் தகவல் கேட்பதற்காக ‘புளு கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக் கோருவதற்காக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

இப்போது புளுகார்னர் நோட்டிஸ் என்பதால் உடனடியாகக் கைது நடவடிக்கை இருக்காது என்கிறார்கள்.

Leave a Response