விஜய் டிவி மீது நடிகை பரபரப்பு புகார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிவடைந்து நாற்பது நாட்களுக்கு மேலாகி விட்டாலும்,அதுகுறித்த சர்ச்சைகள் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மீரா மீதுன், நிகழ்ச்சிக்குள் இருக்கும் போதே சேரன் மீது குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் தொலைக்காட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இந்நிலையில்,நவம்பர் 2 ஆம் தேதி, சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விஜய் தொலைக்காட்சியைக் கடுமையாகச் சாடினார் மீரா மிதுன்.

அதில் அவர் பேசியதாவது:

என்னோட பிக் பாஸ் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட வீடியோக்களை உபயோகப்படுத்திவிட்டு, நிகழ்ச்சி முடிந்தவுடன் எந்தவொரு பதிலுமே இல்லை. கடந்த ஒரு வருடத்தில், புகார் கொடுத்தால் தமிழகத்தில் எந்தவித நியாயமும் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிந்து கொண்டேன். நான் விஜய் தொலைக்காட்சியினருக்கு மெசேஜ், கால் பண்ணினாலும், எந்தவித பதிலுமே இல்லை. சட்டப்படிப் போவேன் என்று சொன்னாலும் பதில் இல்லை. இதற்குப் பிறகு என்ன செய்யணும்னு எனத் தெரியவில்லை.

பிக் பாஸ் வீட்டில் நடந்த சேரன் சாருடைய பிரச்சினையை மனித உரிமை ஆணையத்துக்கு எடுத்துச் சென்று, இந்த நிகழ்ச்சியைத் தடை செய்தால் மட்டுமே எனக்கான நியாயம் கிடைக்கும் என்றால் அதற்கும் தயாராக இருக்கிறேன். விஜய் தொலைக்காட்சிக்கு இதை எச்சரிக்கையாக விடுக்கிறேன். நிகழ்ச்சி முடிந்துவிட்டால், வேலை முடிந்துவிட்டது. இவள் என்ன பெரிதாகப் பண்ணிவிடப் போகிறாள் என நினைக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியே மன வேதனையைக் கொடுக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி தான். நிகழ்ச்சி முடிந்த 15 நாளில் தொகையைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், 40 நாட்களாகிவிட்டது. நான் பெரிய நட்சத்திரம். மற்றவர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை. எங்களால் மட்டுமே உங்களுக்கு டி.ஆர்.பி வந்துள்ளது. இதனால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக எனக்கு என்ன சம்பளம் என்பதைச் சொல்ல முடியாது. எனக்கான வழக்கமான சம்பளத்தை விட, விஜய் தொலைக்காட்சி தலைவர் கெஞ்சியதால் மிகக் குறைவாகப் பண்ணிக் கொடுத்தேன். அதையும் தர மறுக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்காக இதுவரை 10 பைசா கூட வாங்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட நான் யாருடனும் நட்பாகப் பழகவில்லை. அவர்கள் யாருடைய நம்பரும் என்னிடம் இல்லை. என்னுடைய நம்பரும் அவர்கள் யாரிடமும் இல்லை.

இவ்வாறு மீரா மிதுன் பேசினார்.

இதுதொடர்பாக விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் சொல்லப்படவில்லை.

Leave a Response