வீட்டில் தங்கத்தை வைத்திருப்பது தொடர்பாக மத்திய அரசு திட்டம் ஒன்றை கொண்டு வரப்போகிறது என்று நேற்று செய்திகள் வெளியாகின. இந்தத் திட்டத்திற்கு ஆங்கிலத்தில் கோல்டு அம்னெஸ்டி ஸ்கீம் (gold amnesty scheme) என்ற பெயர். இந்தத் திட்டம் கிட்டத்தட்ட வருமான வரித் திட்டம் போலதான்.
இதன்படி மக்கள் வைத்திருக்கும் தங்கத்திற்குக் கணக்குக் காட்ட வேண்டும். எல்லோரும் அவர்கள் வருமானத்திற்கு ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட அளவுதான் தங்கம் வைத்திருக்க முடியும். அதற்கு மேல் தங்கம் வைத்து இருந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும். பில் இல்லாமல் வாங்கிய தங்கம் இருந்தாலும் வரி கட்ட வேண்டும்.
அதாவது வீட்டில் அம்மா 20 பவுன் நகை வைத்து இருக்கிறார். அரசின் வரையறைப்படி அவர் 10 பவுன்தான் நகை வைத்திருக்க முடியும் என்றால், அதற்கு மேல் இருக்கும் நகைக்கு எல்லாம் வரி கட்ட வேண்டும். எவ்வளவு வரி என்று பின்பு கூறப்படும் என்று செய்திகள் நேற்று வெளியாகின.
இதற்குப் பலரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியாவில் 20000 டன் தங்கத்திற்கு மேல் இருக்கிறது. இதை எப்படி வரி போட்டு ஒழுங்குபடுத்துவார்கள். வீட்டில் உள்ள நகைக்கு, பரம்பரை நகைக்கு எல்லாம் எப்படி கணக்கு சொல்வது. பரம்பரை சீராக வரும் நகைக்கு யார் பில் கொடுப்பது என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள்.
இந்தியாவில் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் சிறுவயது முதலே தங்கத்தில் முதலீடு செய்து சேர்க்கின்றனர். அவ்வாறு வாங்கிய தங்கத்திற்கு அவர்கள் ரசீதுகளை சேகரித்து, பாதுகாத்து வைத்திருப்பார்களா ? என்பதும் கேள்விக்குறிதான்.
பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை இந்த அறிவிப்பு மொத்தமாகக் குலைக்கும் என்று கருத்துகள் வெளியாகின.
இது தொடர்பாக நிதித்துறை அளித்துள்ள விளக்கத்தில், எங்களுக்கு தங்கம் தொடர்பாக வரி விதிக்கும் திட்டம் கொண்டு வரும் எண்ணம் இல்லை. இது புரளி. பட்ஜெட் தாக்கல் விரைவில் நடக்க உள்ளதால் செய்திகளில் இப்படி பொய்யான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்விரண்டில் எது உண்மை என்பது போகப் போகத்தான் தெரியும்.