ராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப்படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார். ஈழத்தமிழர்களுக்கு எதிரான கோத்தபாயவின் இந்த திமிர்ப்பேச்சு கண்டிக்கத்தக்கதாகும்.

மகிந்த இராஜபக்சேவின் சிங்கள பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது,‘‘ஐ.நா அமைப்புடன் நாங்கள் எப்போதும் இணைந்து செயல்படுவோம். ஆனால், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிப்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்துடன், முந்தைய இலங்கை அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும் நாங்கள் செயல்படுத்த மாட்டோம். போர்க்குற்றச்சாட்டுகளில் தவறாக சேர்க்கப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் விடுவிக்கப்படுவர்’’ என்று கூறியிருக்கிறார். இதை ஒரு போது ஏற்றுக்கொள்ள முடியாது.

கோத்தபாய இராஜபக்சே இவ்வாறு பேசியிருப்பதன் பின்னணியில் இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான சிங்களர்களைக் காப்பாற்றப்போவதாக கூறுவதன் மூலம், சிங்களர்களிடையே இனவெறியைத் தூண்டி, அதன் மூலம் அவர்களின் வாக்குகளை எளிதாக பெற்று வெற்றி பெறுவது. இரண்டாவது, இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம் அக்காலத்தில் இலங்கை அதிபராக இருந்த மகிந்த இராஜபக்சே, பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய இராஜபக்சே ஆகியோர் தான் என்பதால் தங்களையும் போர்க்குற்ற விசாரணையிலிருந்து விடுவித்துக் கொள்வது ஆகும். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.

2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் விவரிக்க முடியாதவை. உலக அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசியும், ராக்கெட் தாக்குதல் நடத்தியும் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்களப் படையினரின் தாக்குதல்களில் இருந்து தப்பித்த மூன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சிங்களப் போர்ப்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் என்ன ஆனார்கள்? என்பது இதுவரை தெரியவில்லை. இலங்கைப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சொந்தங்களை இழந்த ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில், ஆட்சிக்கே இன்னும் வராத போர்க்குற்றவாளியான கோத்தபாய, போர்க்குற்ற விசாரணைகளை நடத்த மாட்டேன் என்று கொக்கரிப்பது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அவமதிக்கும், சிறுமைப்படுத்தும் செயல் ஆகும்.

இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகளும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களும் தொடர்ந்து மேற்கொண்ட முன்னெடுப்புகளின் பயனாக இலங்கைப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையரின் விசாரணைக்கு 2014 ஆம் ஆண்டில் ஆணையிடப்பட்டது. ஐநா மனித உரிமை ஆணையர் தலைமையிலான விசாரணையில், இலங்கைப் போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து இலங்கை மீதான போர் குற்றச்சாட்டுகள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், போர்க்குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்கவில்லை. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து படைகள் இன்னும் விலக்கப்படவில்லை; நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை.

இலங்கைப் போரின் போது இராஜபக்சே சகோதரர்கள் நடத்திய போர்க்குற்றங்களும், அக்கிரமங்களும் உலகம் அறிந்தவை. டப்ளின் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல தீர்ப்பாயங்கள் அவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்தன. அப்படிப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே தமிழர்களை அச்சுறுத்தி, சிங்கள இனவெறியை தூண்டுகிறார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அதன்பின் இலங்கையில் தமிழர்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. எனவே, இந்த விஷயத்தில் இந்தியா தலையிட்டு கோத்தபாய இராஜபக்சேவின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கையில் போர்க்குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதையும், ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ்வதையும் உறுதி செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response