சுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்

தமிழகத்தில் ஆன்மீக சொற்பொழிவாளராகவும், கைதேர்ந்த மருத்துவராகவும், அனைவராலும் அறியப்பட்டவர் டாக்டர் சுதா சேஷய்யன். இவர், சிவில் சர்ஜன் பொறுப்பை தன்னுடைய 30 வது வயதிலேயே பெற்று, பின்னர் மருத்துவ பேராசிரியராக 30 வருடங்கள் அனுபவம் பெற்றவர் .

மனித உடற்கூறியல் தொடர்பான க்ரேஸ் அனாடமி என்கிற பிரபலமான புத்தகத்தை வெளியிட்ட, சர்வதேச ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவராக இடம் பெற்றிருந்தார். இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள, மனித உடற்கூறியல் துறையின் இயக்குநராகவும், பேராசிரியையாகவும் பணியாற்றி, பின்னர் அக் கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் பணியாற்றிய இவர், சிறந்த நிர்வாகி என்ற விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் எழுதிய மருத்துவ அறிவியல் மற்றும் உடற்கூறியல் தொடர்பான கட்டுரைகள், பல்கலைக்கழகத்தின் அறிவியல் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன், டிசம்பர் 2018 இல் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

அவர் இப்போது, தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்வாகியிருக்கிறாராம். இத்தகவலை நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார்.

அவர், தன்னுடைய டிவிட்டரில்,

உடற்கூறியல் மருத்துவத்தில் உலகப் புகழ் பெற்றவரும், ப்ரிட்டாணிக்கா தகவல் களஞ்சிய நூல்களை தமிழில் கொண்டு வந்தவரும்,சமயத் தமிழில் எழுதியும் பேசியும்
இயங்கியும் வருகின்ற தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.சுதா சேஷையன்
தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராக
தேர்வான செய்திக் காதில் தேனாய் பாய்ந்தது. இது தமிழுக்கு கிடைத்த கவுரவம்; தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை, அவர்கள் பணி சிறக்க வண்ணத்தமிழில் எண்ணம் இனிக்க வாழ்த்துகிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response