இந்தியா – தென்ஆப்பிரிக்கா மட்டைப்பந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் முடிந்துள்ள நிலையில்,அக்டோபர் இரண்டாம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஐந்துநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். இதற்காக அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் அபார பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு, முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.
வழக்கமான பரிசோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்துநாள் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார். முதன்முறையாக இந்திய மண்ணில் ஐந்துநாள் போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் இருந்த பும்ராவுக்கு, காயம் தடைக்கல்லாக அமைந்துவிட்டது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
இதுவரை 12 ஐந்துநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சில் எதிரணி அடித்த ரன்களின் சராசரி 19.24 விழுக்காடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ராவின் விலகல் இந்திய மட்டைப்பந்து ரசிகர்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.