தங்கம் விலை கிடுகிடு உயர்வு – மக்கள் அதிர்ச்சி

கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 64 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை எகிறியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 383-க்கும், ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 64-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.33-ம், பவுனுக்கு ரூ.264-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 328-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் பவுன் ரூ.27 ஆயிரத்து 64 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை அதை தகர்ந்து எறிந்து நேற்று பவுன் ரூ.27 ஆயிரத்து 328-க்கு கிடுகிடுவென உயர்ந்து அந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 160 வரை உயர்ந்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை நாளை(திங்கட்கிழமை) சற்றுக் குறைய வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் மீண்டும் உயரத் தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பொருளாதார யுத்தம் நீடிக்கும் வரை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்றே வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தங்கம் விலையைப் போலவே, வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து இருந்தது. கிராமுக்கு 20 காசும், கிலோவுக்கு ரூ.200-ம் அதிகரித்து, ஒரு கிராம் 44 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆனது.

தங்கம்-வெள்ளி விலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருவது ஏழை மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் பவுன் ரூ.30 ஆயிரத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தங்க வியாபாரிகள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலை ஏற்றம் குறித்துப் பேசிய சென்னை நகைக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி,

இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சியாலும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பின் தங்கி இருப்பதாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் தங்கம் விலை மேலும் உயரும் என்றார்.

Leave a Response