காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்ப்பெண் – சீமான் வாழ்த்து

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் ஜூலை 9 ஆம் தேதி தொடங்கியது.

இந்தப் போட்டியில் தங்கம் வென்ற தங்கை அனுராதா மென்மேலும் வளர்ந்து தமிழ் மண்ணிற்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று
சீமான் வாழ்த்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

சமோவ் தீவிலுள்ள அபியா நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் தஞ்சாவூரில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிற தங்கை அனுராதா பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றிருக்கிற செய்தியறிந்து பேருவகையும், பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.

அவர் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப் பிரிவில் ‘ஸ்னாச்’ முறையில் 100 கிலோ, ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 121 கிலோ என மொத்தம் 221 கிலோ எடையினைத் தூக்கி வெற்றிவாகை சூடியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சியிலுள்ள நெம்மேலிப்பட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்த தங்கை அனுராதா தனது விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் இத்தகைய உயரத்தை எட்டிச் சாதனை படைத்திருக்கிறார்.

தங்கை அனுராதா தனது துறையில் மென்மேலும் வளர்ந்து இன்னும் பல வெற்றிகளை வாரிக்குவிக்கவும், தனது தனித்திறமையின் மூலம் தமிழ் மண்ணிற்குப் பெரும்புகழ் சேர்த்திடவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Leave a Response