தமிழ் இல்லாமல் நடந்த அஞ்சல்துறை தேர்வு – அட்டூழியத்துக்கு முடிவு கிடைக்குமா?

இந்திய அஞ்சல் துறையின் கீழ் நாடு முழுவதும் 1.5 இலட்சம் அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள அஞ்சல்காரர், மெயில் கார்டு, உதவியாளர், பன்முகத் திறன் ஊழியர் உள்பட பல்வேறு பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.

2015 ஆம் ஆண்டு நடந்த போட்டித் தேர்வில் தமிழகத்தில் தேர்வு எழுதிய வெளிமாநில நபர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தனர். இது தமிழக ஊழியர்கள், மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் தமிழ் மொழியே தெரியாத பீகார், அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற முடியும்? என்றும் கேள்வி எழுந்தது.

இதனால், கடந்த 4 வருடங்களாக அஞ்சல் துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக அஞ்சல் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாகின.

அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்ததன் காரணமாக போட்டித் தேர்வு நடத்த மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் ஏற்கெனவே இருந்த தேர்வு நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் தான் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அஞ்சல் துறை எழுத்தர் மற்றும் ஏற்கனவே பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு, மற்றும் பன்முகத் திறன் கொண்ட ஊழியர்களுக்கான தேர்வு, அஞ்சல்காரர் பதவி உயர்வுக்கான தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பும் வெளியானது.

அதன்படி, மத்திய தொலை தொடர்புத் துறை கடந்த 11 ஆம் தேதி அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.அஞ்சல் துறை தேர்வுகள் நடக்கும் போது முதல் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில்தான் கேள்வித்தாள் இடம் பெறும் என்றும் இரண்டாவது தேர்வில் தான் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெறும், 2 ஆம் தாளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டது.

இந்த அறிவிப்பால் தேர்வு எழுதும் நபர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், சமூக நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகளையும்மீறி, அறிவித்தபடி அஞ்சல் துறை தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற்றது. அஞ்சல் துறையில் ஏற்கனவே பணியாற்றும் 989 பேர் பதவி உயர்வு வேண்டி இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.

சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சென்னையில் 150 பேர் எழுதினர்.
நேற்று காலை தொடங்கிய இந்த தேர்வு 3 மணி நேரம் நடந்தது.

போஸ்டல் ரூல்ஸ் 50 மதிப்பெண், ரீசனிங் 20 மதிப்பெண்கள், கணிதம் 20 மதிப்பெண்கள், பொது அறிவு 10, மொழிபெயர்ப்புக்கு 50 என மொத்தம் 150 மொத்த மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய முதல் தாள் தேர்வில் 100 மதிப்பெண்ணுக்கான கேள்விகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் கேட்கப்பட்டு இருந்தன. இதனால் தேர்வு எழுதியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பதவி உயர்வுக்கான தேர்வில் பங்கேற்ற பலர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படையாக கொண்டவர்கள் என்பதால், நேற்றைய தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் படித்துப்பார்த்து புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்.

இரண்டாம் தாளுக்கு மொத்தம் 50 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் அந்தந்த மாநில மொழியில் இடம் பெறுகிறது. இரண்டாம் தாளில் குறைந்தது 40 மதிப்பெண்கள் முழுவதுமாக எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

இதுகுறித்து, தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது…

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்குத் தான் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது. பெரும்பாலானோர் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்து வந்தோம். பலருக்கு ஆங்கிலம் முழுவதுமாகத் தெரியாது.

தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்த அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழில் கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் எளிதாகக் கேள்விகளைப் புரிந்துகொண்டு பதிலளிக்க முடிந்தது. ஆனால், இந்தத் தேர்வில் ஆங்கிலம், இந்தியில் கேள்விகள் கேட்கப்பட்டதால் கேள்விகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது எங்களுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

கேள்விகள் புரியாததால் 50 சதவீத கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டோம். குறிப்பாக கணிதம் மிகவும் கடினமாக இருந்தது. இனி வரும் காலங்களில் இந்த நடைமுறையை தவிர்த்து தமிழிலும் கேள்வித்தாளை வழங்கினால் தமிழகத்தில் உள்ளவர்கள் எளிமையாக தேர்ச்சி பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இத்தேர்வு தொடர்பான வழக்கில், தேர்வு நடந்தாலும் முடிவுகளை வெளியிட மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று, முதல் தேர்வு தமிழ் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.இந்த அட்டூழியத்துக்கு முடிவு கிடைக்குமா? என்று பலர் புலம்பியதைப் பார்க்க முடிந்தது.

Leave a Response