முகிலன் மீது கற்பழிப்பு வழக்கு – உண்மையா? உளவுத்துறையின் சதியா?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய காணொலியை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சமூக ஆர்வலர் முகிலன் வெளியிட்டார்.

அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து மதுரைக்குச் சென்றபோது முகிலன் மாயமானார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் தொடர்வண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி யிடம் ஒப்படைக்கப்பட்டது. முகிலனைக் கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் திருப்பதி தொடர்வண்டி நிலையத்தில் வைத்து முகிலன் நேற்று முன்தினம் இரவு (ஜூலை 6) பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை திருப்பதி தொடர்வண்டி பாதுகாப்புப்படை காவல்துறையினர், வேலூர் மாவட்டம் காட்பாடி தொடர்வண்டி நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் தமிழக தொடர்வண்டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவர்கள், முகிலனை நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் சி.பி.சி.ஐ.டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னை எழும்பூர் பழைய ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முகிலன் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி.காவல்துறையினர் அதிரடித் தகவல் ஒன்றை தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் முகிலன் மீது கற்பழிப்பு, திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல் மற்றும் பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அந்த வழக்கில் முகிலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், முதலில் அவர் சென்னை எழும்பூர் 2-வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அதன்பிறகு நாளை (இன்று) அவர் கரூர் நீதிமன்றத்தில் முறையாக ஆஜர்படுத்தப்படுவார் என்றும் சி.பி.சி.ஐ.டி. யினர் தெரிவித்தனர்.

இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அணு உலைக்கு எதிராகப்போராடிய சுப. உதயகுமாரை காவல்துறை என்னவெல்லாம் செய்தது? என்பதை நாடறியும். இதைவிடக்கொடுமை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பாத்திமாவை அந்தரங்க வீடியோ எடுத்து காலி செய்தது உளவுத்துறை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி, போராளிகளின் பர்சனல் பிரச்சனைகளை தோண்டி எடுத்து, அதன்மூலம் உளவியல் ரீதியான தாக்குதலை நடத்துவதுதான் உளவுத்துறையின் வேலை.இப்போது முகிலன் விசயத்திலும் அதுவே நடக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response