சி பி எஸ் இ பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் – முதல்வர் அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில்,கல்வி வாரியப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மராத்தி மொழிப் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல மத்திய கல்வி வாரியப் பாடத் திட்டமான சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் கல்வி வாரியப் பாடத் திட்டமான ஐ.சி.எஸ்.இ. போன்ற பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை மராத்தி மொழிப்பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.

ஆனால் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் மராத்தி மொழிப் பாடங்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் வந்தன

இது தொடர்பான பிரச்சினை ஜூன் 20 அன்று சட்ட மேலவையில் எதிரொலித்தது. சிவசேனா உறுப்பினர் நீலம் கோரே இந்த பிரச்சினையை கிளப்பிப் பேசினார்.

மாநில கல்வி வாரியத்தில் இடம்பெறாத பள்ளிகளில் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கக் கோரி எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மும்பை ஆசாத் மைதானத்தில் வருகிற திங்கட்கிழமை போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்துப் பேசியதாவது….

அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழிப் பாடம் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, இந்தச் சட்டத்தை அனைத்துப் பள்ளிகளும் அமல்படுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அரசின் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டு, மராத்தி மொழிப் பாடத்தை கற்பிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினையில் தேவைப்பட்டால் நடைமுறையில் உள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். அதன்படி அனைத்துப் பாடத் திட்டங்களின் கீழ் உள்ள பள்ளிகளிலும் மராத்தி மொழிப் பாடம் கட்டாயமாகக் கற்பிக்கப்படுவது உறுதிப்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் தேேவந்திர பட்னாவிஸ் கூறியிருக்கிறார்.

Leave a Response