மோடி அமைச்சரவை விவரம் மற்றும் இடம்பெறாத மாநிலங்கள் விவரம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மோடி 2 ஆவது முறையாக மே 30 ஆம் தேதியன்று பிரதமர் பதவி ஏற்றார்.

அவருடன் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 9 பேர் தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாகவும், 24 பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர்.

மோடிக்கும், களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடி மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளும் இடம்பெற்று உள்ளன. மந்திரிசபையில் பிரதமரையும் சேர்த்து மொத்தம் 58 பேர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரவையில் உத்தரபிரதேசத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்ததாக மராட்டியம் சார்பில் 8 பேரும்,

மத்தியபிரதேசம், பீகார் சார்பில் தலா 5 பேரும்,

கர்நாடகத்தின் சார்பில் 4 பேரும்,

குஜராத், ராஜஸ்தான், அரியானா சார்பில் தலா 3 பேரும்,

பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் சார்பில் தலா 2 பேரும்,

தெலுங்கானா, ஒடிசா, சத்தீஷ்கார், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், காஷ்மீர், அசாம், அருணாசலபிரதேசம், கோவா, டெல்லி, கேரளா சார்பில் தலா ஒருவரும் மந்திரிசபையில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

ராஜ்நாத் சிங்குக்கு மந்திரிசபையில் 2 ஆவது இடம் அளிக்கப்பட்டு உள்ளது. முந்தைய மோடி அரசில் உள்துறையை கவனித்து வந்த இவருக்கு இப்போது இராணுவ இலாகா ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும், பாரதீய ஜனதா தலைவருமான அமித்ஷாவுக்கு மந்திரிசபையில் 3 ஆவது இடம் வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

முந்தைய அரசில் அருண் ஜெட்லி கவனித்து வந்த நிதி இலாகா தற்போது நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர் முந்தைய அரசில் இராணுவ அமைச்சராக இருந்தார்.

முன்பு வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றிய ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரிக்கு அவர் முன்பு கவனித்து வந்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையும்,

பீகாரைச் சேர்ந்த லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு, முன்பு அவர் கவனித்து வந்த உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகார இலாகாவும்,

கர்நாடக முன்னாள் முதல்வரான சதானந்த கவுடாவுக்கு ரசாயனம் மற்றும் உரத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பியூஸ் கோயலுக்கு ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் இலாகாவும்,

ஸ்மிரிதி இரானிக்கு பெண்கள், குழந்தைகள் மேம்பாடு, ஜவுளி இலாகாவும்,

ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்ட இலாகாவும்,

பிரகாஷ் ஜவடேகருக்கு சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகாவும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

தர்மேந்திர பிரதான் பெட்ரோலிய துறை அமைச்சராகவும்,

முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும்,

நரேந்திர சிங் தோமர் விவசாய அமைச்சராகவும்,

ரமேஷ் பொக்ரியால் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராகவும்,

ஹர்ஷவர்தன் சுகாதார துறை அமைச்சராகவும்,

ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நீர்வளம், குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு ஆகிய இலாகாக்களை ஒன்றாக இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள ஜலசக்தி இலாகா கஜேந்திர சிங் செகாவத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அமைச்சரவையில், மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து சிக்கிம் திரிபுரா ஆகிய சிறிய மாநிலங்களோடு தமிழகத்துக்கும் பிரதிநிதித்துவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response