பாஜக கூட்டணி மற்றும் பாஜக தனியாகப் பெற்ற இடங்கள்

7 கட்டங்களாக நடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 23 காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே முன்னணியில் இருந்தன. இந்த முன்னணி தொடர்ந்து நீடித்தது.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 353 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதில் பாரதீய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்கக் குறைந்த பட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு அதைவிடக் கூடுதல் இடங்கள் கிடைத்து உள்ளன.

குஜராத், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களிலும் மற்றும் தலைநகர் டெல்லியிலும் பாரதீய ஜனதா அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2 ஆவது முறையாகப் போட்டியிட்ட பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), நிதின் கட்காரி (நாக்பூர்) உள்ளிட்ட தலைவர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

Leave a Response