கோவையில் 1000 திருச்சியில் 300 பெரம்பூரில் 500 வடமாநிலத்தவருக்கு அரசு வேலை தமிழருக்கு இல்லை – கண்டித்து மறியல்

இந்திய அரசு தமிழ்நாட்டிற்கெதிராக பல்வேறு உரிமைகளில் இனப்பாகுபாடு காட்டுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசின் தொழிற்சாலைகள், தொடர்வண்டித்துறை (இரயில்வேஸ்), அஞ்சல் துறை, வருமான வரி – ஜி.எஸ்.டி. வரி அலுவலகங்கள், கணக்குத் தணிக்கை அலுவலகம், துறை முகங்கள், வானூர்தி நிலையங்கள் முதலிய 18 துறைகளிலும் திட்டமிட்டு தமிழ்நாட்டு இளைஞர்களைப் புறக்கணித்து வடமாநிலங்கள் மற்றும் இதர வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே நூற்றுக்கு நூறு விழுக்காடு அல்லது தொண்ணூறு விழுக்காடு அளவுக்கு வேலையில் சேர்க்கிறார்கள்.

அண்மையில் திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தில் பழகுநர் பணிக்கு (Act Apprentice) பொன்மலையில் நடந்த நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 1,765 பேரில் சுமார் 100 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 1,600 பேர் வடமாநிலங்களையும், இதர வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். இவர்களில் முந்நூறு பேர் பொன்மலை பணிமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை!

மேலும், முந்நூறு பேரை திருச்சி கோட்டத்தில் பல்வேறு இடங்களில் – பணிகளில் சேர்த்துள்ளார்கள். அதிலும் தமிழர்களுக்கு வேலை இல்லை! சென்னை பெரம்பூர் கேரேஜ் பணிமனையில் பழகுநர் பணிக்கு நேர்காணலில் அழைக்கப்பட்ட 1,600 பேரில் 600 பேர்க்கு பணி கொடுத்துள்ளார்கள். அதில் 500 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கோவை “எஸ் அண்ட் சி” (Signal and Communications) பணிமனையில் 4,000 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். இதில் 2,000 பேரை பணியமர்த்தியுள்ளார்கள். அதில் 1,800 பேர் வட இந்தியர்களும் பிறமாநிலத்தவரும் ஆவர்.

சென்னை ஆர்.ஆர்.பி. என்பது தொடர்வண்டித்துறையில் தமிழர்களைப் புறக்கணித்து, வடவர்களை சேர்க்கும் மையமாகவே செயல்படுகிறது (R.R.C – Reject Tamils Recruit Northners Board)!

தொடர்வண்டித்துறையில் தமிழ்நாட்டில் அதிகாரிகள் முதல் இரயில்வே கேட் மூடித் திறப்பவர்கள் வரை பெரும்பாலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு வேலையில் சேர்த்து உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் 2005லிருந்து பழகுநர் (ஆக்ட் அப்ரண்டிஸ்) பயிற்சி முடித்த 15,000 பேர் வேலை கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார்கள். அதில் 28 பேர் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள்.

பொன்மலை பணிமனையில் இப்போது பணிபுரியும் 3,000 தொழிலாளர்களில் 1,500 பேர் வெளி மாநிலத்தவர். இந்த வெளி மாநிலத்தவரில் 10 விழுக்காட்டினர் – அதாவது 300 பேர் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். எஞ்சிய 1,200 பேரை வெளியேற்ற வேண்டும். அந்த இடங்களில் தகுதியுள்ள தமிழர்களை நியமிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அஞ்சல் துறைக்கு 4,452 பணிக்கு விண்ணப்பம் கோரிய அறிவிப்பு விளம்பரம் மோசடியாக செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் போட கடைசி நாள் 2019 ஏப்ரல் 15. ஆனால், தமிழ்நாட்டில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட்ட நாள் 2019 ஏப்ரல் 5. வடநாட்டில் இவ்விளம்பரம் வெளியான நாள் 2019 மார்ச் 15.

இதைவிட மோசடி இன்னொன்று; இந்த வேலைக்கான விண்ணப்பம் இணைய வழியில் (Online) அனுப்பப்பட வேண்டுமென்பது நிபந்தனை. ஆனால், தமிழ்நாட்டில் அவர்கள் அறிவித்திருந்த இணையதளத்தின் சர்வர் வேலை செய்யவில்லை. இதனால் தமிழர்கள் வேலை விண்ணப்பம் போட முடியவில்லை.

கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவங்களில் இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராக இனப் பாகுபாட்டு வஞ்சகங்களை அரங்கேற்றுகிறது.

வடநாட்டில் செயல்படும் பணித் தேர்வுக்கான பயிலகங்கள் (Coaching Centers) தமிழ்நாட்டில் வேலை திருடித் தரும் முகவர்களின் கூடாரமாகவே விளங்குகின்றன. இத்திருட்டுக்கு இந்திய அரசின் அமைச்சர்கள் – உயரதிகாரிகள் உடந்தையாய் இருக்கிறார்கள். பங்குத்தொகை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த வழியாகத்தான், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் 18 துறைகள் சார்ந்த தொழிலகங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் 100க்கு 90 பேர் என்ற அளவுக்கு வெளி மாநிலத்தவர்கள் வேலையில் சேர்க்கப்படுகிறார்கள். மண்ணின் மக்களாகிய தமிழர்கள் இவற்றில் விரட்டியடிக்கப்படு கிறார்கள்.

மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் அந்த மாநிலத்தின் மொழி, பண்பாடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் வளர்ச்சி பெறுவதற்காகத்தான்! ஆனால், இந்திய ஆட்சியாளர்களும், வடநாட்டு அதிகாரிகளும் 1956இல் இயற்றப்பட்ட மொழிவழி மாநிலச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

எனவே, பொன்மலை பணிமனையிலும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொடர்வண்டித் துறையிலும் 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். அந்த இடங்களை தகுதியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள இந்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 90 விழுக்காட்டு வேலை தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும். அவற்றில் 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து இன்று 03.05.2019 வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி தலைமையில் பொன்மலை தொடர்வண்டி பணிமனை முன்பாக மக்கள் திரள் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

Leave a Response