பொன்பரப்பி கொடுமை – கள ஆய்வுக்குப் பின் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்பரப்பி கிராமத்தில் ஏப்ரல் 18 தமிழகத் தேர்தல் நாளில் கடும் வன்முறை அரங்கேறியது. பாமக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் மோதல் என்று சொல்லப்பட்டாலும் அது சாதிய மோதல்தாம் என்கின்றனர்.

இந்நிலையில் பொன்பரப்பி சென்றுவந்த தமிழ்த்தேசியப் பேரியக்கக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

கடந்த 18.04.2019 அன்று தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, அரியலூர் மாவட்டம் – செந்துறை ஒன்றியத்திலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுகள், தமிழினத்தை வெட்கித் தலைகுனிய வைத்தன. சாதியின் பெயரால் தமிழ் மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் இக்கொடுமை தமிழின உணர்வாளர்களை அதிரச் செய்தது.

பொன்பரப்பியில் நடைபெற்ற சாதிய வன்முறை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான காணொலிப்பதிவு, காண்போர் மனத்தை அச்சமடையச் செய்ததுடன் அங்கு நடந்த சாதிய வெறியாட்டத்தின் கோரத்தை வெளிப்படுத்தியது. அக்காணொலி ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான், பொன்பரப்பி நிகழ்வு பெருமளவில் வெளியுலகிற்குத் தெரிய வந்தது.

இதனையடுத்து, 20.04.2019 அன்று காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இச்சாதிய வெறியாட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து முகநூலில் காணொலிப் பதிவு வெளியிட்டார்.

கடந்த 22.04.2019 காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கனகசபை, தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிமாறன் ஆகிய நாங்கள் பொன்பரப்பி கிராமத்திற்கு ஒரு குழுவாகச் சென்று நேரில் விசாரித்தோம்.

பொன்பரப்பி கிராமத்தின் எல்லையிலிருந்து ஊர் முடியும் வரை காவல்துறையினர் ஆங்காங்கு குழுமியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் காலனிப் பகுதிக்குச் சென்றபோது, அங்கு வீடுகள் தாக்கப்பட்டு நிலைகுலைந்து கிடந்தன. ஆங்காங்கு இளைஞர்கள் குழு குழுவாக நின்று கொண்டிருந்தனர்.

தாக்குதலில் காயம்பட்டிருந்த – பொன்பரப்பியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் திரு. பொ.கு. செங்கோலரசன் (தென்சென்னை வணிகர் அணி பொறுப்பாளர்) அவர்கள் அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தார். அவரை சந்தித்து நடந்த நிகழ்வுகளைக் கேட்டறிந்தோம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வாழும் பட்டியல் வகுப்பு இளைஞர்கள் பலரும் சென்னையில் கோயம்பேடு சந்தையில் வேலை பார்ப்பவர்கள் என்றும், எல்லோரும் வாக்களிக்க ஊருக்குத் திரும்பியிருந்ததையும் அவர் கூறினார். தாக்குதலில் காயம்பட்ட பலர் அவரவர் தாங்கள் தாக்கப்பட்ட விதத்தை எடுத்துக் கூறினர். அதன்பிறகு, தெருவுக்குள் சென்று அங்கிருந்த மக்களிடமும், இளைஞர்களிடமும் பேசினோம்.

பட்டியல் வகுப்பு மக்கள் வாழும் காலனிக்குள் திபுதிபுவென புகுந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாதி வெறிக்கும்பல், அங்கிருந்த நூறு அகவையைத் தொடும் மூதாட்டியைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனை! நாயகம் என்ற அந்த மூதாட்டியை வன்முறையாளர்கள் கட்டிலிலிருந்து கீழே வீசியுள்ளனர். அதைத் தடுக்கச் சென்ற அவரது மகனும், மருமகளும் தாக்கப்பட்டதை அவர்கள் எங்களிடம் கூறினர். அதுபோல், பலர் தாக்கப்பட்டிருந்தனர்.

தாக்குதல் நடைபெற்ற பிறகு மொத்தமாக 12 பேர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது அதில், 7 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையிலும் 3 பேர் அரியலூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் நான்கு பேருக்கு தலையில் கல்வீச்சுக் காயம்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் காயங்களுக்கு சிகிச்சைப் பெற்றுத் திரும்பியிருந்தனர். காயம்பட்ட பலர் காவல்துறை விசாரணை மற்றும் வழக்குகளுக்கு அஞ்சி வீட்டிலேயே மருத்துவம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

நாங்கள் சென்றிருந்தபோது, அங்கு வந்திருந்த அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் உடைந்த ஓடுகளையெல்லாம் நீக்கிவிட்டு, புது ஓடுகளாக மாற்றும் பணியில் வேகவேகமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சேத மதிப்பீட்டுக்காக இரு சக்கர ஊர்திகள் அவை தாக்கப்பட்ட இடத்திலேயே கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. சற்றொப்ப 13 இரு சக்கர ஊர்திகள் ஆங்காங்கு நொறுங்கிக் கிடந்தன. சில ஊர்திகள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தன.

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த “பானை” சின்னம் வரையப்பட்டிருந்த வீடுகள் குடிசை வீடுகளாக இருந்திருந்தால் அவையெல்லாம் கொளுத்தப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் கூறினர். ஓட்டு வீடுகளாக இருந்த காரணத்தால், ஓடுகளை உடைத்து சுக்குநூறாக்கியிருக்கின்றனர். பல இடங்களில் வேலிகள் தகர்க்கப்பட்டுக் கிடந்தன. சில இடங்களில் வெளியில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் நசுக்கப்பட்டுக் கிடந்தன.

திடீரென காலனிக்குள் புகுந்து பட்டியல் மக்களை வெறிகொண்டு தாக்குமளவிற்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள, பிற்படுத்தப்பட்ட வன்னியர் வகுப்பைச் சேர்ந்த மக்கள் வாழும் பகுதிக்குள் சென்றோம். அப்பகுதியே வெறிச்சோடியிருந்தது. காவல்துறையினரின் தேடுதலுக்கு அஞ்சி ஆண்கள் பலரும் தலைமறைவாக இருக்கின்றனர். பெண்களே அங்கு இருந்தனர்.

வெளியூரிலிருந்து ஊருக்கு வந்த சில இளைஞர்கள் மட்டும் அங்கு இருந்தனர். அவர்களுடன் காவி வேட்டியுடன் இந்து முன்னணி அரியலூர் மாவட்டச் செயலாளர் இராஜசேகர் நின்று கொண்டிருந்தார். சிறுகடம்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்புச் சிறுமி நந்தினி கொலை வழக்கில் ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்ட நபர் இவரே! வன்முறை நடைபெற்ற நாளில் அவர் ஊரில் இல்லை என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இப்போதும் அங்குதான் ஊரில் இருக்கிறார். அவரைச் சுற்றி சில இளைஞர்கள் அவருடன் எப்போதும் உள்ளனர். அப்பகுதிக்குச் சென்ற நம் குழுவினரை அந்த இளைஞர்களில் சிலர் கமுக்கமாக படம் எடுத்துக் கொண்டிருந்ததையும் கவனித்தோம்.

இதனையடுத்து, அங்கிருந்த தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணாமணி என்பவரை சந்தித்தோம். அவரிடம் பேசியபோது, காலனி மக்களுடன் ஒன்றாகத்தான் சகோதரத்துவதுடன் பழகி வந்தோம், ஆனால் நடைபெற்ற நிகழ்வுகள் அந்த சகோதரத்துவத்தைக் கெடுத்துவிட்டதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். இரு தரப்பிலும் மது போதையில் சிலர் செய்த நடவடிக்கைகள் மிகப்பெரும் வன்மத்தை இங்கு விதைத்துவிட்டது என்று கூறினார். பெயர் குறிப்பிட விரும்பாத வன்னிய வகுப்பு இளைஞர்கள் சிலரும் இவ்வாறே கூறினர்.

பொன்பரப்பி கலவரம் திடீரென நடந்திருந்தாலும், அதற்கான விதை இங்கு பல்லாண்டுகளுக்கு முன்பே ஊன்றப்பட்டுவிட்டது. ஊரை ஒட்டிய சாலையில் வி.சி.க.வினர் கொடியேற்ற முயன்றது, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அவர்கள் காலமானபோது – காலனிப் பகுதியில் சிலர் பட்டாசு வெடித்த நிகழ்வு எனத் தொடங்கி, அண்மையில் அ.தி.மு.க.வினர் பரப்புரைக்கு வந்தபோது ஊரின் முதன்மைச் சாலையில் தி.மு.க.வினர் வரைந்திருந்த “பானை” சின்னம் அழிக்கப்பட்ட நிகழ்வு வரை எனப் பல நிகழ்வுகள் அங்கிருந்த சாதி வன்மத்தைத் தீவிரப்படுத்தின. எனவேதான், ஒரு சிறிய சச்சரவில் காலனிக்குள் புகுந்து வீடுகளைத் தாக்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக திரண்டுள்ளனர். அவ்வாறு திரண்டவர்களில் பலர் சிறுவர்கள் என்பது கொடுமை!

வன்னிய மக்கள் வாழும் பகுதியில் இந்து முன்னணி கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பா.ம.க.வினரில் கணிசமானவர்கள் இந்து முன்னணியிலும் இருக்கின்றனர். பிற கட்சிகளை சேர்ந்த பிற்படுத்தப்பட்டவர்களும் இந்து முன்னணியில் இருக்கின்றனர். பட்டியல் வகுப்பு மக்களில் சிலர் கிறித்துவ மதத்தினர் இருக்கின்றனர். இந்து முன்னணியில் பிற்படுத்தப்பட்டவர்கள் திரள்வதற்கு இதுவும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்நிலையில், முதன்மைச்சாலையிலுள்ள ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு வாக்குப்பதிவு நாளன்று காலையில், மது போதையில் இருந்த இந்து முன்னணி ஆதரவாளர்கள் சிலர் வேண்டுமென்றே பானைச் சின்னத்தை சாலையில் போட்டு உடைத்து பிரச்சினைக்குத் தொடக்கப்புள்ளியாக இருந்துள்ளனர். அதன்பிறகும் பானை உடைப்புகள் நடந்து பதட்டம் அதிகரித்துள்ளது.

சற்றொப்ப 4,000 வாக்குகள் உள்ள இப்பகுதியில், பட்டியல் சாதி மக்களுக்கு 600 வாக்குகள் மட்டுமே உள்ளன. எனவே, அவர்கள் காலையிலேயே வந்து தம் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஏறத்தாழ 300 வாக்குகள் போடப்பட்ட நிலையில்தான், பிற்பகல் 2 மணியளவில் பானைகள் உடைக்கப்பட்ட செய்தி பட்டியல் மக்கள் வாழும் காலனியில் பேசு பொருளானது.

இந்நிலையில், காலனியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த வன்னிய வகுப்பு மாற்றுத் திறனாளி இளைஞர் வீரபாண்டியனை பானை உடைப்புக்கு பதிலடியாக பட்டியல் வகுப்பு இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளனர். முதன்மைச் சாலையின் ஒரு புறத்தில் பட்டியல் மக்கள் குடியிருப்பும், இன்னொரு புறத்தில் பிற்படுத்தபட்டோர் குடியிருப்பும் உள்ள நிலையில், அங்கு இரு தரப்பினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு கல்வீச்சு வரை சென்றுவிட்டது. வி.சி.க. கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வாக்குச்சாவடியிலிருந்து வந்த பா.ம.க.வினரும், காலனி இளைஞர்களும் மோதிக் கொண்டனர். கல்வீச்சு தீவிரமானது.

வன்னிய வகுப்பைச் சேர்ந்த சுப்பிரமணி, கமலக்கண்ணன் ஆகிய இருவர் இதில் இரத்தக் காயமடைந்த நிலையில், அந்த வழியாக இரு சக்கர ஊர்தியில் வந்த இளைஞரும் தாக்கப்பட்டார். இச்செய்தி ஊருக்குள் பரவ, ஏற்கெனவே சாதிப் பகைமை பரவியிருந்த நிலையில் திடீரென்று திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காலனிக்குள் வேகவேகமாகப் புகுந்தனர். பட்டியல் வகுப்பு இளைஞர்கள் உயிருக்கு அஞ்சி காலனிப் பகுதிக்குள் தப்பியோடி மறைந்தனர். இதனையடுத்து, காலனித் தெருக்களில் இருந்த வீடுகளை நொறுக்கத் தொடங்கினர். இவ்வாறுதான் வன்முறை வெடித்ததாக அறிய முடிகிறது.

பானை உடைப்பும், அதைத் தொடர்ந்த உணர்ச்சிவயப்பட்ட எதிர்வினைகளும் தொடர் வன்முறையாக மாறாமல் தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு 45 நிமிடங்கள் கழித்துதான் வந்துள்ளதாக காலனி இளைஞர்கள் கூறுகின்றனர். அவர்களும் வந்தவுடன் செயல்பட்டிருந்தால் நிகழ்வைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் செய்யாமல் காவல்துறையினர் தாமதமாக வந்தது பல ஐயங்களை ஏற்படுத்துவதாக காலனி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

பொன்பரப்பியிலேயே சிறப்புக் காவல்படையினர் போதிய எண்ணிக்கையில் இருந்தபோதும் அவர்கள் தாமதம் செய்தது இந்த ஐயங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்கள் தரப்பில், 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் வேண்டுமென்றே பலரைக் கைது செய்யாமல் தவிர்த்துள்ளனர் என பட்டியல் வகுப்பு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பட்டியல் வகுப்பு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொன்பரப்பி வன்முறை நிகழ்வுகளுக்குப் பின், சமூக வலைத்தளங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை இழித்தும் பழித்தும் பேசிய பா.ம.க. ஆதரவாளர்கள் சிலரும், பிற்படுத்தப்பட்ட மக்களைக் கொச்சைப்படுத்திப் பேசி காணொலி வெளியிட்ட வி.சி.க.வினர் சிலரும் ஆங்காங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதட்டமான வாக்குச்சாவடி என முன்பே கணிக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில் கூடுதல் காவல்துறையினரையும், காப்புக் காவல் படையினரையும் வைத்திருந்த போதும் அவர்களை உரிய முறையில் – உரிய நேரத்தில் பயன்படுத்தாதது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. வன்முறை நடக்கட்டும் என வேடிக்கைப் பார்த்தது போலவே இது தெரிகிறது.

பரிந்துரைகள்

1. இரு தரப்பிலும் தாக்கப்பட்டவர்களைக் கொண்டு அடையாள அணிவகுப்பு நடத்தியும், காணொலிப் பதிவுகளைக் கொண்டும் சான்றுகள் சேகரிக்கப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் இருப்பின் காவல்துறையினர் அவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றிக் கைது செய்ய வேண்டும். வேண்டுமென்றே கண்ணில் பட்டவர்களையெல்லாம் கைது செய்யும் நடவடிக்கை, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல – உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விடும் குற்றச்செயலும் ஆகும்!

2. சேதப்படுத்தப்பட்ட வீடுகள், இரு சக்கர ஊர்திகள் ஆகியவற்றை முறையாகக் கணக்கெடுத்து அதற்குரிய முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

3. சட்டவிரோத மது விற்பனை குறித்து பலமுறை புகார் அளித்தும் கண்டு கொள்ளாத பொன்பரப்பி காவல் ஆய்வாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. குடிநீர், பள்ளிக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றுக்காக பட்டியல் வகுப்பு மக்கள் வன்னியர்கள் வாழும் பகுதிக்கு அன்றாடம் செல்ல வேண்டியதிருப்பதால், பட்டியல் வகுப்பு மக்கள் பகுதியிலேயே இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துத் தர வேண்டும்.

5. சாதிய வெறியாட்டங்களுக்கு மட்டுமின்றி, பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கும் துணைக் காரணியாக உள்ள மதுக்கடைகளை தமிழ்நாடு அரசு மூட வேண்டும்.

தனது தேர்தல் வெற்றிக்காக அப்பாவி மக்களிடையே சாதி உணர்வைத் தூண்டிவிடும் அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரு தரப்பிலும் உள்ள மிகச்சிறிய தன்னல சக்திகளின் அரசியல் தேவைக்கு, ஒட்டுமொத்த மக்களும் பலியிடப்படுவதுதான் அவ்வப்போது நடக்கிறது. தாக்குதல், வழக்கு, விசாரணை என அலைக்கழிப்புகள்தான் மக்களுக்கு இதன்வழியே பரிசாகக் கிடைக்கின்றன. நம்மோடு வாழ்ந்து வரும் சக மனிதர்களோடு மோதி நாம் எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு மேலோங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு உரிமை, ஸ்டெர்லைட் ஆலை மூடல் என எத்தனையோ உரிமைகளையும், சாதனைகளையும் சாதி கடந்து ஒருங்கிணைந்துப் போராடியதால்தான் நம்மால் சாதிக்க முடிந்தது. ஒரு சாதியினர் மட்டுமே போராடி வாங்கித் தந்த உரிமையென ஒன்றைக்கூட நம்மால் சுட்டிக்காட்ட முடியாது!

ஒரு பக்கம் சிமெண்ட் ஆலைகளின் இயற்கை வளச் சூறையாடல்; இன்னொரு பக்கம், தீவிரமான மணல் கொள்ளை! இதன் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டதுடன், நூறடிக்கும் கீழறங்கிச் சென்ற நிலத்தடி நீரால் பொய்த்துப் போன வேளாண்மை! இவற்றின் காரணமாக, இப்பகுதி மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு கூலிகளாக இடம் பெயர்ந்து கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக இருக்கின்றனர். இப்போது, அந்த குறை வேலைகளையும் தொகை தொகையாக வரும் வெளி மாநிலத்தவர் பிடுங்கிக் கொள்கின்றனர்.

தமிழர்களின் தனித்துவ ஆன்மிக மரபை ஆரிய ஆன்மிகமாகத் திரிக்க முற்படும் “இந்து முன்னணி” போன்ற ஆரியத்துவ அமைப்புகளை தமிழ் மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். சாதிகளிடையே கலகத்தை மூட்டுவதைத் தன்னுடைய வேலைத் திட்டமாகக் கொண்டுள்ள “இந்து முன்னணி” போன்ற அமைப்புகளை கிராமங்களில் அனுமதிப்பதன் வழியாக, அங்கு எப்படியெல்லாம் அமைதி கெடுகிறது என்பதற்கு பொன்பரப்பி ஒரு எடுத்துக்காட்டு!

தமிழ்த்தேசிய விடுதலை இலட்சியத்திற்காக தமிழர்களை சாதி சமத்துவ அடிப்படையில் அணிதிரட்டிய தமிழ்த்தேசியப் போராளி தோழர் தமிழரசன் குருதி சிந்திய பொன்பரப்பி மண்ணில், சாதியின் பெயரால் நடைபெற்ற நிகழ்வுகள் நாம் எங்கே தோற்றுள்ளோம் என்பதை உணர்த்தி நிற்கிறது. எனவே, இனியாவது நம் வாழ்வாதாரங்களை மீட்கும் போராட்டத்தில் உண்மையான எதிரிகளுக்கு எதிராக நாம் அனைவரும் தமிழரென்ற ஒற்றுமை உணர்வுடன் இணைய வேண்டும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response