மு.க.அழகிரிக்கு மிரட்டல் – தமிழக அரசியலில் பரபரப்பு

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. இவருக்கு சொந்தமான ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதுபற்றி அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் வைப்புத் தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 25 அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடங்கும். சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள் ஈட்டப்பட்டு உள்ளன.

இந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களான எஸ். நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரி உள்ளிட்ட பிற குற்றவாளிகள், சட்டவிரோத முறையில் குத்தகை நிலத்தில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலன் பெற்று, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்துள்ளது.

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடந்த விசாரணையில், இவர்கள் லாப நோக்குடன் தொடர்ச்சியாக குற்றத்தில் ஈடுபட்டது, சட்டவிரோத முறையில் குவாரி நிறுவனம் நடத்தி, அதன்வழியே வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது

இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது சட்டத்திற்கு புறம்பாக வரம்பு மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக புகார்கள் எழுந்தன.

இதையொட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு துரை தயாநிதி மற்றும் அவரது நண்பர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

சுமார் ஏழாண்டுகளாகக் கிடப்பில் இருந்த இந்த வழக்கில் இப்போது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அவற்றில் திருப்பரங்குன்றம் தொகுதியும் ஒன்று.

அங்கு மு.க.அழகிரி அதிமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் அல்லது திமுக வேட்பாளரை எதிர்க்கவாவது செய்யவேண்டும் என்று ஆளுங்கட்சி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அதை மு.க.அழகிரி ஏற்றுக்கொள்ளாததால் அவரை மிரட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு.

Leave a Response