ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக பழ.நெடுமாறன் வேண்டுகோள்

7 பேர் விடுதலை,மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பீா் என்று
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

25 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

ஏற்கெனவே 1999 ஆம் ஆண்டில் நால்வரின் கருணை மனுக்களை அப்போதைய ஆளுநர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டபோது, அதை ஏற்று ஆளுநரின் ஆணை செல்லத்தக்கது அல்ல என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1980 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “அரசியல் சட்டம் 161ஆம் பிரிவின்படி சிறைவாசிகளின் தண்டனையை குறைத்தல், விடுதலை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து மாநில அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும். அந்த ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவராவார்” எனத் தெளிவாகக் கூறியுள்ளதை சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டித் தீர்ப்பளித்தது.

அதற்குப் பின்னரே மத்திய, மாநில அமைச்சரவைகளின் ஆலோசனைகளை குடியரசுத் தலைவரும், ஆளுநர்களும் ஏற்றுத் தீரவேண்டிய கட்டாயம் உருவாயிற்று.

எனவே, மேலும் காலதாமதம் செய்யாமல் அரசியல் சட்டத்தையும், அமைச்சரவையின் ஆலோசனையையும் மதித்து 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் சட்டப்பூர்வமான கடமையாகும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Leave a Response