சட்டப்படி நடக்காத ஆளுநர் அலுவலகம் – பேரறிவாளன் புகார்

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனும் தமிழ்நாடு அரசு தீர்மானத்தின் மீது ஆளுநர் ஏன் இன்னும் முடிவு எடுக்கவில்லை எனும் விவரத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் தெரிவிக்காத இராஜ்பவன் தகவல் தொடர்பு அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பேரறிவாளன் வலியுறுத்தியுள்ளார்.

தவிரவும், பலமுறை முயன்றும் பேரறிவாளனின் பிரதிநிதியைச் சந்திக்கவோ, பேசவோ அந்த அதிகாரி மறுத்து வருகிறார் எனவும் அறிவு, உரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச்சட்டம் 161-ன் கீழ் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனும் தமிழக அரசின் பரிந்துரையின் நிலை என்ன எனக் கேட்டு 2018 நவம்பர் 8 -ஆம் நாளன்று
பேரறிவாளன் தனது முதல் விண்ணப்பித்தில் கேட்டிருந்தார்.

ஏழு தமிழரை விடுதலை செய்ய முடியாத அளவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏதாவது வழக்கு நிலுவையில் உள்ளதா எனவும், அதனால்தான் ஆளுநர் கையொப்பம் இடாமல் காத்துக் கொண்டிருக்கிறாரா எனவும் பேரறிவாளன் கேட்டிருந்தார்.

ஆனால் 30 நாட்களாக அவருக்குப் பதில் ஏதும் தரப்படவில்லை.

இருப்பினும், 2018 திசம்பர் 27 – ஆம் நாளன்று பேரறிவாளனின் பிரதிநிதியை நேரில் சந்திக்க முடியாது என மீண்டும் அந்த அதிகாரி கூறிவிட்டார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, அந்த அதிகாரி தனது கடமை மற்றும் பொறுப்பைச் சரிவர ஆற்றவில்லை என்பதைப் பேரறிவாளன் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே தனது வேண்டுகோளை அவசரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், சட்டப் பிரிவு 7 (6) -ன்படி தான் கேட்ட விவரங்களை வழங்க வேண்டும் எனவும் பேரறிவாளன் விண்ணப்பித்துள்ளார்.

– கண.குறிஞ்சி

Leave a Response