40 நாட்களுக்குள் 4 ஆவது முறை – மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை வருகிறார்.

வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

சென்னை விமான நிலையத்துக்கு மாலை 3.30 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்குச் செல்கிறார்.

முதலில், அரசு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி,அதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள மேடையில் நடைபெறும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.

மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

40 நாட்களுக்குள் 4 ஆவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. கடந்த முறை போலவே இம்முறையும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் திரும்பிப் போ மோடி என்கிற குறியீட்டுச்சொல் டிரெண்டாகிவருகிறது.

#GoBackModi
#GoBackSadistModi

Leave a Response