அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய நீதிக் கட்சி

2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பா.ம.க., புதிய தமிழகம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் மார்ச் 4 இரவு 8.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமைக் கழகம் சென்று தொகுதிப்பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான உடன்படிக்கையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் கையெழுத்திட்டனர். 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் புதிய நீதி கட்சி, அ.தி.மு.க.வை ஆதரிக்கும் என்று உடன்பாடு அறிவிப்பை வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response