பாஜக கூட்டணியில் எடப்பாடி இணைவார் – ஏ.சி.சண்முகம் தகவல்

ஏப்ரல் மாதவாக்கில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,எடப்பாடி அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாகத் தற்போதுவரை சொல்லப்படுகிறது.

இதனால், சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க பாஜக முடிவு செய்திருப்பதைப் போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இணைந்து புதிய நீதிக்கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னையில் நேற்று அளித்த பேட்டிடில்…

பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன். புதிய நீதிக் கட்சி சார்பில் கடந்த 6 மாதங்களாகத் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 20 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்முனைப் போட்டியாக தேர்தல் களம் இருக்கும். வேலூர் கோட்டையில் தாமரை மலரும். மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது.இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.சி.சண்முகம், 2019 மக்களவைத் தேர்தலில் இதே வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கினார். அப்போது திமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.

இப்போது துணிந்து களமிறங்கக் காரணம், மக்களவைத் தேர்தலுக்குள் எடப்பாடி அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம் என்று அவர் கூறியிருப்பதுதான் என்கிறார்கள்.

நிச்சயம் எடப்பாடியும் பாஜக கூட்டணிக்குள் வருவார். அப்போது தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று ஏ.சி.சண்முகம் நம்புகிறார். அதன் காரணமாகவே தன்னைத் தானே வேட்பாளராக அவர் அறிவித்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response