உபியில் களம் இறங்கும் பிரியங்கா – ராகுலின் உத்தி பலிக்குமா?

காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது….

கர்நாடக காங்கிரசுக் கட்சியின் பொறுப்பு பொதுச்செயலாளராக இருந்து வரும் கே.சி. வேணுகோபால், காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக(நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், கர்நாடகத்தில் அவர் வகிக்கும் பதவியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா வத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உ.பி. கிழக்கு பிராந்தியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அவர் அந்தப் பதவியை ஏற்பார்.

காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக ஜோதிர்ந்தியா சிந்தியா நியமிக்கப்பட்டு, அவருக்கு உ.பி. மேற்கு பிராந்தியம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, அந்தப் பதவியில் உடனடியாக அவர் இணைகிறார்.

உ.பி. மாநில பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த குலாம் நபி ஆசாத், கூடுதலாக, ஹரியானா மாநில பொதுச்செயலாளராகவும் இனி பொறுப்பு வகிப்பார்.

இவ்வாறு காங்கிரசுக் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை முழுநேர அரசியலில் ஈடுபடாமல் அவ்வப்போது ரேபரேலி, அமேதி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பிரியங்கா வத்ரா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், முதல் முறையாக காங்கிரசுக் கட்சியில் அதிகாரபூர்வப் பதவி பிரியங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

47 வயதாகும் பிரியங்கா தீவிர அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 1999 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராபர்ட் வத்ராவை திருமணம் செய்தபின் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தார்.

தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் உத்தரப்பிரதேசம் ரேபரேலி மக்களவைத் தொகுதி, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பிரியங்கா காந்தி ஈடுபட்டுவந்தார். மற்றவகையில் தீவிரமான அரசியலில் அவர் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசை அகற்றும் காங்கிரசுக் கட்சி மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி வருகிறது, பாஜகவை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று காங்கிரசுக் கட்சி திட்டமிட்டு இருந்தது. ஆனால், 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தனியாகக் கூட்டணி அமைத்து அறிவித்தன.

இதனால் உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலை தனித்துச் சந்திக்கும் நிலை காங்கிரசுக் கட்சிக்கு உருவானது. 80 தொகுதிகளிலும் போட்டியிடுவோம், தீவிரமாகக் களத்தில் இறங்குவோம் என்று ராகுல் காந்தி பேட்டி அளித்தார்.

இதனால், நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உ.பியில் 80 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளில் வெற்றியைப் பெறும் நோக்கில் பல்வேறு கட்ட ஆலோசனைகளில் காங்கிரசுக் கட்சி ஈடுபட்டு வந்தது.

அந்த ஆலோசனையில் முக்கிய நகர்வாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு முதல்முறையாகக் களமிறங்கியுள்ளார் காங்கிரசுத் தலைவரும், அவரின் சகோதரருமான ராகுல் காந்தி.

ராகுலின் இந்த முடிவு காங்கிரசுக்குப் பலன் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Leave a Response