பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நிதின்கட்கரி? – தில்லி பரபரப்பு

புனேவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, வெற்றிக்கு எல்லாரும் பொறுப்பேற்கின்றனர். தோல்விக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. தோல்விக்கு தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று பேசினார்.

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வி பற்றியும் அதற்கு கட்சித் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று கட்கரி மறைமுகமாக கூறுவதாகச் செய்திகள் வெளியாகின.

அதோடு ஆர் எஸ் எஸ் அமைப்பு, பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக நிதின்கட்கரியை முன்னிறுத்தவிருப்பதாகவும் அதனாலேயே அவர் இவ்வாறு பேசுகிறார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டரில் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில்,கடந்த சில நாட்களாக நான் கூறிய கருத்தை சில எதிர்க்கட்சிகளும் ஊடகங்களில் ஒரு பிரிவும் அரசியல் ரீதியான உள்நோக்கத்தோடு திரித்து வெளியிடுகின்றன.

பாஜக தலைமைக்கும் எனக்கும் இடையே பிளவு ஏற்படுத்த சதி நடக்கிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் வரும்போதெல்லாம் ஏற்கெனவே கடுமையாக மறுத்துள்ளேன். என்மீதான இதுபோன்ற விஷமத்தனமான பொய்யான குற்றச்சாட்டுகளை மீண்டும் மறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் விளக்கம் கொடுத்தாலும் நெருப்பில்லாமல் புகையாது பாஜகவுக்குள் அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் ஒத்த கருத்து இல்லாமல் மோதல் ஏற்பட்டுள்ளதாகவே சொல்லப்படுகிறது.

Leave a Response