ரஜினி இதை உணர்கிறாரா? – ரசிகரின் திறந்த கடிதம்

அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் ரசிகன் (வெறியன்) தலைவா நீங்கள் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

முதலில் நான் உங்களது ரசிகனாக பயணபட்டு வந்ததை தெரிவித்துக் கொள்கிறேன்

முதன்முதலில் நான் போயஸ் தோட்ட இல்லத்தில் தங்களைச் சந்தித்தேன் அப்பொழுது தாங்கள் கொடிபறக்குது திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயம்.

உங்களைப் பார்த்து விட்டு வந்த பிறகு அன்று இரவு முழுவதும் உங்கள் முகம் தான் என் நெஞ்சம் முழுவதும். அந்த வெள்ளை பைஜாமா டிரஸ் அந்த விபூதி பட்டை வெள்ளைநிற செருப்பு அப்படியே என் மனதில் ஆழமாகப் பதிந்தது.

உங்களைச் சந்திப்பதற்கு முன் நான் தங்களுடைய ரசிகன் இல்லை.தங்களைச் சந்தித்த பிறகு ஏதோ ஒன்று என்னை தங்களுடைய வெறியனாக மாற்றியது.

பிறகு தங்களுடைய ஒவ்வொரு படம் திரையிடலுக்கு முதல் நாள் முதல் ஷோ பார்த்து விடுவேன் இதற்காக எனக்கு செலவுக்குக் கொடுக்கும் காசைச் சேர்த்து வைத்து தங்களுடைய படம் ரிலிஸ் தேதி அறிவித்ததும் ரசிகர் மன்றத்திற்குச் சென்று காசு கொடுத்து விடுவேன் இல்லையென்றால் டிக்கெட் கிடைக்காது.

அப்படித் தான் தங்களுடைய படம் ராஜாதி ராஜா படத்திற்குக் காசு கிடைக்கவில்லை டிக்கெட்டும் கிடைக்கவில்லை. எப்படியோ படம் ரிலிஸ் அன்று பணம் ரெடிபண்ணி மன்றத்தில் முதல் நாள் இரவு கொடுத்தால் டிக்கெட் இல்லை என்று கூறி விட்டார்கள்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை காலையில் எழுந்து நண்பர்களிடம் விசாரித்தேன் டிக்கெட் கிடைக்கவில்லை பள்ளிக்கு கட் அடித்துவிட்டு சைக்கிள் எடுத்துக் கொண்டு சௌக்கார்பேட்டையில் இருந்து அம்பத்தூருக்கு சைக்கிளில் சென்று வரிசையில் நின்று மதிய Show க்கு டிக்கெட் எடுத்து பார்த்து வந்தேன்.
ஏதோ சாதித்து விட்டது போல் ஒரே சந்தோஷம்.

ராகவேந்திரர் படம் வெளிவந்த சமயம் அப்பொழுது ரசினிரசிகனில் தாங்கள் ராகவேந்திரராக வேடமிட்ட புகைப்படம் ஒன்று கொடுத்தார்கள் அதை ப்ரேம் போட்டு பீரோ டிராயரில் வைத்து மலர் வைத்து பூஜை செய்வேன் இதைப்பார்த்து என் அம்மா உனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று திட்டி தங்களுடைய படத்தைத் தூக்கி எறிந்து விட்டார்கள் அதனால் இரண்டு நாள்
என் அம்மாவிடம் பேசவில்லை.

அதன் பிறகு மனிதன் திரைப்படத்திற்கும் டிக்கெட் கிடைக்கவில்லை அது பொங்கல் நாள் வேறு. என்ன செய்வதென்று தெரியவில்லை பிறகு என் நண்பன் சரவணன் காஞ்சிபுரத்தில் இருந்தான் நீ இங்க வா என்றான் சரி என்று எனது இன்னொரு நண்பன் சங்கரை அழைத்துக்கொண்டு காஞ்சி புரம் சென்று அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கி விட்டோம்.

அப்பொழுது என் நண்பனிடம் முதல் ஆளா நான் தான் தியேட்டருக்குள் போய் உட்காருவேன் என்று சொல்லி விட்டு மூடிய கேட்டின் முன்னே முதல் ஆளாக நின்று கொண்டிருந்தேன் எனது பின்புறம் என்னைப் போட்டு தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

கேட் திறக்கும் நேரம் வந்தது மூச்சைப் பிடித்துகொண்டு நின்றிருந்தேன். கேட் திறந்தது. அடுத்த நிமிடம் பின்னால் இருப்பவர்கள் தள்ள நான் ஓடிய அடுத்த வினாடி ஒரு போலிஸ்காரர் லத்தியை ஒங்கி அடிக்க அது என் தொடையில் பலமாக விழுந்தது அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தியேட்டரில் முதல் ஆளாகப் போய் அமர்ந்தேன். பிறகு இடைவேளையில் எழுந்த பொழுது என்னால் நிற்க முடியவில்லை.போலிஸ் அடித்ததில் தொடையில் மரண வலியை அப்பொழுதுதான் உணர்ந்தேன்.

பிறகு படம் முடிந்த பிறகு எனது நண்பர்கள் தான் என்னை வீட்டிற்குத் தூக்கிச் சென்றார்கள். காஞ்சியில் இரண்டு நாள் தங்கிவிட்டு சென்னையில் என் வீட்டிற்கு வந்தால் என் அம்மாவிற்கு விசயம் தெரிந்து மர ஸ்கேல் உடையும் அளவிற்கு அடி விழுந்தது.

இப்படி என்னைப் போன்ற ரசிகர்கள் தமிழகத்தில் உங்களுக்கு 6 வயது முதல் 60 வயது வரை கோடிக்கணக்கான தங்களுடைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தாங்கள் அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூறி ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் தங்களின் கட்சிப் பெயரை அறிவிக்காமல் உள்ளது தங்களின் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமாக உள்ளது.

நீங்கள் தமிழக ரசிகர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் உங்கள் பிறந்த நாளன்று தங்களுடைய கட்சியின் பெயரை அறிவித்து முழுமையாக அரசியலில் இறங்குங்கள். இப்படி எதெற்கெடுத்தாலும் யோசித்து காலம் தாழ்த்தாதீர்கள்.

நீங்கள் அரசியலில் வரவேண்டும் என்று என்னுடைய விருப்பம் இல்லை.ஒரு வேலை ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் நான் தங்களுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்று இருப்பேன்.

தூத்துக்குடி சென்று தாங்கள் தெரிவித்த கருத்தால் தங்கள் மீது இருந்த நல்ல அபிப்பிராயம் போய் விட்டது.
உங்களுடைய ரசிகர்களாகிய தமிழக மக்களுக்கு நல்லது செய்ய எதுக்கு தலைவா யோசிக்கனும் நல்லது செய்யனும்னு நெனச்சா அடுத்த நிமிடமே நீங்கள் ஆரம்பித்து இருக்க வேண்டாமா. இதுக்கு எதுக்கு ஆண்டவனிடம் கேட்க வேண்டும்.

நீங்கள் வருவதாக இருந்தால் உங்கள் பிறந்த நாள் பரிசாக அறிவிப்பு செய்யுங்கள்.

ஆனால் தாங்கள் இனிமேல் அரசியலுக்கு வருவதில் எனக்கு உடண்பாடு இல்லை.

நான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகனாகவே இருக்கவே ஆசை.

தெளிவான தீர்க்கமான முடிவை எடுங்கள். நீங்களும் குழம்பி ரசிகர்களையும் குழப்பாதீர்கள்.

தங்களை நாங்கள் கடவுளாக வழிகாட்டியாக தலைவனாக நினைத்து கொண்டிருக்கும் வேலையில் தங்களுடைய செயல்கள் எங்களை வருத்தம் கொள்ள வைக்கிறது.

தீர்க்கமான முடிவு எடுக்க தெரியாத யாரும் நல்ல தலைவனாக இருக்க முடியாது.

இப்படிக்கு உங்கள் ரசிகன்(வெறியன்)

– ஈஸ்வர் ஒளிப்படக் காதலன்

Leave a Response