சென்னையில் நடந்த டி 20 போட்டி – இறுதிப்பந்தில் எட்டிய வெற்றி

சென்னையில் நடைபெற்ற இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் மட்டைப்பந்தாட்ட அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட் செய்தது.

20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பூரன் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இந்திய அணிதரப்பில் சஹால் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா அணி.

இந்திய அணித்தலைவர் ரோகித் 4 ரன்னில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு மோசமான தொடக்கத்தை தந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ராகுல் அதிரடியாக பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை அளித்தாலும், 17 ரன்னில் தாமஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரிகள் விளாசினார்.

அதன் பின்னர் தொடக்க ஆட்டக்காரர் தவானுடன் இணைந்தார் இளம் வீரர் பண்ட். 6 ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டை இழந்து விட்டதால், முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, 10 -வது ஓவருக்குப் பின்னர் அதிரடியில் இறங்கியது.

ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வேண்டும் என்ற நிலையில் விக்கெட் கொடுக்காமல், விரட்டி அடித்தனர் தவானும் ரிஷப் பண்ட்டும். அதிரடியாக விளையாடிய தவான் முதலில் அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து பண்ட் அரை சதம் விளாசினார்.

இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணியின் வெற்றி எளிதானது. இறுதிக்கட்டத்தில் பண்ட் 58 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார்.

இறுதி வரை நிலைத்து நின்று ஆடிய தவான் 2 பந்துக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதி பந்தில் 1 ரன் தேவை என்ற நிலையில் மணீஷ் பாண்டே, சிங்கிள் எடுக்க முயற்சிக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிஸ் ஃபீல்டு செய்ய வெற்றி இலக்கை கடைசிப் பந்தில் எட்டியது இந்தியா.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில், 182 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்தியா. எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியில் இறுதிப் பந்து வரை ஆட்டம் சென்றது.

இதன் மூலம், டி 20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. ஏற்கனவே, இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response