14 வருட பாஜக ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது காங்கிரஸ்

கர்நாடகாவில் பாராளுமன்ற மக்களவை தொகுதிகளான சிவமுகா,பெல்லாரி, மாண்டியா ஆகிய தொகுதிகளுக்கும், ஜமகாண்டி மற்றும் ராமநகரா ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று மக்களவை தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் பா.ஜ.க வசமும், 1 தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் வசமும் இருந்தது.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த 3 மக்களவை மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 4 தொகுதியில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் பா.ஜ.க ஆதிக்கம் செலுத்தி வந்த பெல்லாரி தொகுதி இம்முறை காங்கிரஸ் வசமானது. காங்கிரஸின் வி.எஸ்.உகரப்பா, பாஜக-வின் சாந்தாவை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பெல்லாரி தொகுதியில் 198340 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இது கடுமையான சரிவாக பார்க்கப்படுகிறது.

இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்த ஸ்ரீராமலு, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றியை நிலைநாட்டியுள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

பெல்லாரி பகுதியில் 8 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. கடைசியாக நடந்த தேர்தலில் இந்த 8-ல் 6 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Response