பெட்ரோல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் – அதிர வைக்கும் புதிய தகவல்

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் 84 ரூபாய் 19 காசுகள் என்று இருந்தது. நேற்று மீண்டும் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது.

இது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு உள்ளது.

பெட்ரோல் விலையேற்றம் குறையும் வாய்ப்பு இல்லையென்றும் மாறாக இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம், ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை பாதியாக குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதுதான் என்கிறார்கள்.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 2வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நாள் ஒன்றுக்கு 6,58,000 பேரல் என்ற அளவில் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. செப்டம்பர் மற்றும் அக்டோபரில் இதை நாள் ஒன்றுக்கு 3,60,000 முதல் 3,70,000 பேரல் என குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே 2015ம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக கூறி அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் டிரமப் கடந்த மே மாதம் அறிவித்தார். பின்னர் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

வரும் நவம்பரில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் மீதும் பொருளாதாரத் தடை வருகிறது.

இதனால், ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வந்தது.

இதையடுத்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக நிறுத்தப்பட்டு விடும் என தெரிகிறது.

ஈரான் கச்சா எண்ணெயால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஓரளவு சமாளிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

ஒருவேளை அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாமல் இந்திய அரசு செயல்பட்டால் மாற்றம் வரலாம் என்றும் சொல்கிறார்கள். மோடி என்ன செய்யப்போகிறாரோ?

Leave a Response