
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் வரியைக் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து முந்தைய நாள் உயர்வை முறியடித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து 82.62 ரூபாய்க்கம், டீசல் 22 காசுகள் உயர்ந்து, 75.61 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் அதிகபட்சமாக பெட்ரோல் 86.91 ரூபாய்க்கும், டீசல் விலை 75.96 ரூபாய்க்கும் விற்பனை செய்ப்படுகிறது. அதேசமயம் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் 79.51 ரூபாய்க்கும், டீசல் 71.55 ரூபாய்க்கும் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் விலையை உயர்த்தி, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை ஏன் இப்படி வதைக்கிறார் மோடி என்று மக்கள் புலம்புகின்றனர்.
இந்த விலை உயர்வு பாஜகவுக்குப் பெரிய பின்னடைவு என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள்.


