காலா வில் ரஜினியா ? மனம் ஒப்பவில்லை – கவிஞர் தமிழச்சி

காலா படம் பற்றி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ள அனுபவப் பகிர்வு….

வணக்கம் தம்பி பா.ரஞ்சித்,
‘காலா ‘ பார்த்தேன்.
பார்த்தவுடன் எனக்கேற்பட்ட மன உணர்வுகளின் பகிர்வே இது.

நான் ஒரு கைதேர்ந்த திரைப்பட ரசிகையோ அல்லது அதன் நுணுக்கங்களை அறிந்து அதில் தோய்ந்து ரசிக்கின்ற ஆழங்கால் பட்ட விமர்சகியோ அல்ல.
ஒரு கூட்டனுபவமாகத் திரையில் காட்டப்படுவதை எனதொத்த ஐனத் திரளோடு அமர்ந்து உள்வாங்கி, பகிர்ந்து ரசித்து அந்த வாழ்வோடு சமயங்களில் சில மணிநேரம் மட்டும், பலசமயங்களில் அதன் சிராய்ப்புக்களைத் தூக்கி அலைந்து கொண்டும் – சராசரியாக அதனோடு உறவு வைத்திருக்கின்ற வெகுஐனத்தில் ஒருத்தி. (வெகுஜன ரசனை என்ன என்பதிலும் யார்அந்த வெகு ஜனம் என்பதிலும், நானும் அத் திரளில் முகமற்ற ஒருத்தி என்பதால்-எனக்கு கேள்வியும் குழப்பமும் உண்டு)
எனவே இது விமர்சனமோ அலசலோ விவாதமோ அல்ல. ஒரு தன்னிலை வெளிப்பாடான பகிரல் மட்டுமே 🙂

திரு. ரஜினிகாந்தோடு அரசியல் ரீதியாக எதிர்த்திசையில் முரண்பட்டு நிற்பவள் நான்.
அவரது ‘ஆன்மீக அரசியல்’- அது அடிகோலுகின்ற அபாயமிருக்கின்ற ‘இந்துத்துவ பாசிசத் திறப்பு’இவற்றால் அவரது அரசியல் தலைமை ஒருபோதும் தமிழகத்திற்கு அமையக்கூடாதெனும் நிலைப்பாடும் அரசியலும் கொண்டவள்.
ஒரு கலைஞனாக திரு. ரஜனிகாந்த் குறித்து அலசி ஆராயுமளவிற்கு அவரது திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்தவளும் அல்ல – அதற்கான அறிவோ நுணுக்கங்களோ அத் துறையில் பெற்றவளும் அல்ல. ஒரு திரைப்படக் கலைஞனாக அவரை மதிப்பவள் – அவ்வளவே!

ஆனால் ஒரு கலைஞனாக உங்களின் படைப்புகளின் மீது விருப்பமும், உங்களது அரசியல் நிலைப்பாடுகளில் நம்பிக்கையும் கொண்டவள்.
அதற்குரிய நம்பிக்கையினை உங்களது முந்தைய படைப்புகள் அளித்தன.

‘காலா’ அதனைக் ‘கபாலியை’விட அதிகமாக உறுதிப்படுத்தியிருக்கிறது – அதில் நீங்கள் முன் வைக்கின்ற அரசியலால்.

ஒரு திரைப்படமாக அது கிளர்த்திய கண்ணீர், மலர்த்திய புன்னகை, கீறிய குற்றவுணர்வு, அது அழைத்துச் சென்ற வாழ்க்கையின் இடுக்குகள், தொட்டு எழும்புகின்ற நம்பிக்கையின் உயரங்கள் இவற்றைத் ‘தாராவியின்’பின்புலத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே என்னால் உள்வாங்கி விட்டு விலக முடியவில்லை.

ஏனென்றால் ‘தாராவி’ இதற்கு முன்னரான திரைவெளியில் காட்டப்பட்டது போல வெறும் பின்புலம் மட்டும் அல்ல அதில் உங்களுக்கு.
It is not just a Canvas but a Life!

திரைப்படப் பார்வையாளர்கள், திரைப்பட ரசனையின் / நுட்பத்தின் / விமர்சனத்தின் வல்லுநர்கள், விற்பன்னர்கள் – இவர்களுக்கான மனோவழி அனுபவமும், உலகெங்கும் ஒடுக்கப்படுகின்றவர்களின் (பார்வையாளர்களாக அவர்களது) மனோவழி அனுபவமும் வேறு. கலை எனும் ரசவாதம் கண்ணீருக்கு ஒரே உப்புதான் எனும் மாயத்தைச் செய்தாலும் – கூடுதல் ஒட்டாக இப்படைப்போடு உறவு கொள்ள ஓடுக்கப்பட்டவர்களையும், அவர்கள் கைப்பிடித்து நம்மையும் அந்த மனோவழியே அழைத்துச் செல்லும்.
அந்த மறுக்கப்பட்ட, அடக்கப்பட்ட இடத்திலிருந்து, அவர்களது மொழியில், அவர்களுக்காகச் சொல்லப்பட்டாலும் அது நம் மொழியும் நமக்கானதும் தான்!

அவ்வகையில் ‘காலா’ நான் நம்புகின்ற அரசியலை முன்வைக்கின்ற படைப்பு மட்டுமல்ல, நிலம் பிடுங்கப்பட்ட அத்தனை மக்களுடைய மனோவழி அனுபவத்தையும் எனக்களித்த படைப்புமாகும்!
ஒடுக்கப்பட்ட, சமகாலத்தில் வாழ்கின்ற மக்களது வாழ்க்கையை, ஒரு “மாஸ் ஹீரோவீற்கான”மிகைகள் இல்லாமல், ‘எதிர் அழகியல்’என்றொரு ‘Aesthetics‘ ஐ சட்டகமாக கொண்ட படைப்பு என்பது என் புரிதல்.

அதன் முற்பகுதி ‘தாராவி’ மக்களின் அன்றாட நகர்விற்கான நடைமுறைச் சிக்கல்கள், இருத்தலுக்கான பிரயத்தனங்கள், அவர்களது எளிய ஆசைகள், நியாயமான கனவுகள், உறுதியான நம்பிக்கைகள், அவர்களது இருப்பை ஆணிவேர்வரை கட்டறுக்க காலங்காலமாகக் கருவிக் கொண்டிருக்கின்ற ஆதிக்க கரங்கள், அதன்பாற்பட்ட துரோகங்கள் – எல்லாவற்றையும் முன்நிறுத்தியது எனக்கு.

பிற்பகுதியோ அடங்க மறுத்தலையும், உரிமையின் வலிமையையும் நினைவூட்டிப் பூர்வகுடிகளுக்கு, மண்ணின் மைந்தர்களுக்கு, வாழ் நிலம் பிடுங்கப்பட்டு துரத்தப்படுபவர்களுக்கு – “உடம்பே ஆயுதம்! நிலமே வலிமை!” என்பதைச் சுட்டி நிறைவுறுகிறது!
(ஏனோ இங்கு நான் ராணிமேரிக்கல்லூரியில் பணி புரிகையில் மெரீனாவை அழகுபடுத்த நம் மீனவர்களை இடம் பெயரச் சொன்ன போது , அவர்களோடு ‘மேதா பட்கர்’ வந்தமர்ந்த போராட்டத்தை நினைவு கூறத் தோன்றுகிறது.
“கடலுக்கழகு கட்டுமரம்
கடற்கரைக்கழகு மீனவர் எம் வீடுகள்” எனப் பறந்த பதாதைகளின் கம்பீரம் கண்ணில் நிற்கிறது)

தாராவியின் அந்த முகங்களும், உடல் மொழியும், திறந்தவெளிக் கலை வெளிப்பாடுகளும் – கைநடுங்கச் சிணுங்கும் பிறந்த குழந்தையைத் தொட்டுத் தூக்குகின்ற பரவசத்தையும், விபத்தில் பறிகொடுக்கின்ற உறவுகளின் சில்லிட்ட விரல்களின் கனத்தையும் ஒருங்கே தந்தன எனக்கு.

“கருப்புசிவப்புநீலங்“ குழைந்து கலந்து ஒரே வண்ணமாகப் பிளிறும் அந்த Climax இல்
(Slow Motion என்பதே டூயட்டிற்குத்தான் எனும் சிற்றறிவுப் பேதை நான்) உணர்ச்சி வசப்பட்டது உண்மைதான்.

பெருமழையில் சிங்கத்தின் கர்ஜனை, புலியின்பாய்ச்சல், யானையின்பிளிறல் இவற்றையெல்லாம் சடாரென ஒரு வேடனின் அம்பு துளைத்தெடுத்து வெளிவருகையில் வானம் வடிந்ததொரு வானவில் வெளிப்பட்டதைப் போன்றதொரு உச்சக்காட்சி அது!

“கலை பேசுகின்ற அரசியலை விடக் கலையின் அரசியல் முக்கியமானது” என்பதை நம்புபவள் தான் நான். ஆனால் இந்தக் ‘கலையின் அரசியலுக்கான’வரைபடத்தை வரைந்தவர்கள் யார்? எனும் கேள்வியும் அதற்கான இலக்கணத்தை எம் நிலம், மக்கள் மொழி, அவர் தம் வாழ்வோடு இயைந்த அழகியல் இவற்றைக் கொண்டே எழுத வேண்டும் என்கிற தெளிவும் எனக்குண்டு.

அவ்வகையில் ‘காலா’வில் கலையின் அரசியலை விட அது பேசுகின்ற அரசியல் எனக்கு மிக முக்கியம்- அவசியம்.

போலவே –
யார் என்ன பேசுகிறார்கள், என்ன மொழியில் பேசுகிறார்கள், யாரைப் பார்த்துப்பேசுகிறார்கள், யார்மூலமாகப் பேசுகிறார்கள், யாருக்காகப் பேசுகிறார்கள்- இவை அனைத்துமே முக்கியம்-
Be it political or personal!
அவ்வகையில் திரு. ரஜினிகாந்த் மூலமாகத் திரையில் இவ்வரசியல் முன் வைக்கப் பட்டது எனக்கு ஒப்பவில்லைதான். (அவரது அரசியல் நிலைப்பாடு தூத்துக்குடி பேட்டிக்கு முன்பாகவே நாம் அறிந்தது தான்)
ஆனால் அதைத் தேர்ந்தெடுக்கின்ற சுதந்திரமும், உங்களவிலான பதிலும் ஒரு இயக்குநராக உங்களுக்கு உண்டு என்பதை நான் மதிக்கிறேன்.

ஆகவே – உங்களது தெரிவைத் தாண்டியும் இத்திரைப்படம் ஒரு அனுபவமாக எனக்கு என்ன அளித்தது என்பதைப் பிரித்துப் பார்க்கின்ற தெளிவும் எனக்கு வேண்டும் என நம்புகிறேன்.

அதைத் தெளிவு என்பதை விட என் அனுபவத்தை – எப்போதும் ஒடுக்கப்பட்டவர் பால் நிற்கின்ற – என் அரசியல்உணர்வு சார் சாய்புணர்வு சற்றுத் தூக்கலாக அதை நிர்ணயிப்பதனை, நான் நேர் கொள்ள வேண்டும் என்பதாக அர்த்தப் படுத்திக்கொள்கிறேன்.

ஆகவே –
‘காலா’ வைப் பார்த்தேன்.

நிலவில் காலடி வைத்த ஆர்ம்ஸ்டிராங் சொன்னதாக ஒரு வாசகம் உண்டு –
“மனிதனுக்கு இது ஒரு சிறு காலடி வைத்தல் தான்.
ஆனால் மனிதகுலத்துக்கு இது மிகப்
பெரிய பாய்ச்சல்”
எனக்கு ஆகப் பெரிய மகிழ்ச்சி இதுதான்-
திரைஉலகில் இது உங்களுக்கு மிகப் பெரிய பாய்ச்சல்!
ஆனால் அரசியலில் திரு. ரஜனிகாந்திற்கு இது ஒரு சிறு காலடி நகர்தல் கூட இல்லை!

ஆகப் பெரிய வருத்தமும் உண்டு –
தோழர் லெனினது பெயரை, N.G.O. களுடன் அறியாமல் பணி ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்கின்ற கதாபாத்திரத்திற்குத் தெரிவு செய்தது.
ஆரம்பத்தில் அவ்வயதிற்கான துடிப்பான முறுக்கோடு, நல்லது நடக்க வேண்டும் என்கிற கனவுடன் காலாவிடமிருந்து விலகல், பின்னர் புரிதலுடனுடான இணைதல் என வார்க்கப்பட்டிருக்கின்ற அதனை மனித மனதிற்கான இயல்பான தடுமாற்றங்களுடன் பின்னர் காலப்போக்கில் அடையும் தெளிவுடன் நீங்கள் வனைந்திருக்கலாம்.

என்றாலும், அந்தப் பெயரும், அதற்குப் பின்னிருக்கின்ற கருத்தியல் சித்தாந்தமும் எனக்கு முக்கியமானது என்பதால் கூடுதலாக வருத்தம்.
இதுவரையிலும் –
பிற பேனாக்கள் வெறும் ஊதா மையூற்றி மட்டுமே எழுதி வந்த தாராவியை நீங்கள் வண்ண மை ஊற்றி வாழ்க்கையாக வரைந்திருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்!

உங்களுக்கும் – அதனை வியர்வையும் ரத்தமுமாய் – வலியும் உரிமையுமாய் – ஒரு சரிசமன் வாய்மொழியில் வசனங்களால் உயிர்ப்பித்திருக்கும் தோழர் Aadhavan Dheetchanyaஆதவன் தீட்சண்யாவிற்கும், தோழர் மகிழ்நன் பா.மமகிழ்னனுக்கும்!
பாடல் எழுதியிருக்கின்ற தங்கை Uma Deviகு.உமாதேவிக்கும்!
இதில் பணிபுரிந்த நண்பர் Arun Dirஅருணுக்கும்!
இதுவரையிலும் –
ராஜபாட்டைகளில் பிற ரதங்கள் குதிரைகளில் ஏறிக் கடந்து ஏற்றிய கொடியை
இனி ‘மனுசக்’கால்கள் உரிமையோடு நடந்து போய் இறக்கட்டும்!

Disclaimer/
என் அனுபவத்தின் பகிரல் மட்டுமே இது!
சாமானிய சாதாரண வெகுஜனத் திரளில் தூசு நான்.
இதுவரையிலும் எந்த திரைப்படத்தையும் விமர்சித்திராத – அத்துறை அறிவாளியும் அல்லள்.
அதை அறிந்த ‘அப்புராணியும்‘ கூட.
அரசியல் சித்தாந்தங்களிலும் ஆழப் படித்துக் கரை கண்டவளோ, அதில் விவாத நீச்சல் அடித்து ‘கோப்பை’வெல்லும் உத்தேசமோ இல்லாதவள்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response