இயக்குநர் அமீர் மீது வழக்கு உடனே கைது செய்ய முயற்சி

கோவை எஸ்.என்.ஆர். அரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் ‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக் காகவா? அரசியல் காரணங்களுக்காகவா?’ என்ற தலைப்பில் வட்டமேஜை விவாத நிகழ்ச்சி ஜூன் 8 ஆம் தேதி மாலை நடந்தது.

இவ்விவாத நிகழ்வில், தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா), செம்மலை (அ.தி.மு.க.), டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.), பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்டு கம்யூ.), ஞானதேசிகன் (த.மா.கா.), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசு (இந்திய குடியரசு கட்சி), திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

நிகழ்வில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி, இயக்குநர் அமீர் பேசுகையில், ‘கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்துக்கு யார் காரணம்? அவ்வளவு வன்முறைகள் நடந்த போதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லையே? என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து அரங்கில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த பா.ஜனதா கட்சியினர் மற்றும் சார்பு அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர்.

இதைத் தொடர்ந்து அமீருக்கு ஆதரவாக,நாம்தமிழர் கட்சியினரும் தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவையினரும் பேசினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பாஜக்வினரை அமைதிப்படுத்த தமிழிசையிடம் நிகழ்ச்சி நெறியாளர் கேட்டுக்கொண்ட போதும், அவர் அதைச்செய்யவில்லை.

இதனால் நிகழ்ச்சி பாதியில் நின்றது. அரங்குக்கு வெளியே இருந்த தனியரசு மகிழுந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

இயக்குநர் அமீர் தெரிவித்த கருத்து கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததை குறிப்பிட்டு பொறுப்பில்லாமல் தெரிந்தே அவ்வாறு பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிகழ்ச்சி நடந்த அரங்கின் பொறுப்பாளர் சுந்தர்ராஜன் கோவை பீளமேடு காவல்துறையில் புகார் அளித்தார்.

அவரது புகாரை தொடர்ந்து இயக்குநர் அமீர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153(ஏ) (மோதலை தூண்டும் வகையில் பேசுதல்), 505 (பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த புகாரை தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக் காட்சி நிர்வாகத்தின் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153(ஏ) (மோதலை தூண்டும் வகையில் பேசுதல்), 505 (பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசுதல்) மற்றும் 3(1) தமிழ்நாடு பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல் பிரிவு அரங்கில் இருந்த இருக்கைகள் சேதம் அடைந்ததற்கு காரணமான அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஓர் ஊடகத்தின் ஏற்பாட்டில் நடந்த விவாத அரங்கில் பேசியதற்காக இயக்குநர் அமீர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கும், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கும் அரசியல்தலைவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்,

திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கிய பாஜகவினர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதோடு இவ்வழக்கில் அமீரை உடனடியாகக் கைது செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுவதற்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

Leave a Response