கர்நாடகத்தில் 222 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல்

கர்நாடகத்தில்,காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவ்வரசின் பதவிக் காலம் முடிவடைய இருப்பதை யொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்ட சபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியதால் ராஜராஜேஸ்வரி தொகுதியின் தேர்தல் வருகிற 28–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீதம் உள்ள 222 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரசுக்கட்சி, பாரதீய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 3 முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

தென் மாநிலங்களில் முதன்முதலாக கர்நாடகத்தில்தான் பாரதீய ஜனதா காலூன்றியது. கடந்த 2008–ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து 2013–ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்து, காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது.

பின்னர் 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளை கைப்பற்றி பாரதீய ஜனதா மீண்டும் தனது பலத்தை உறுதி செய்தது.

இந்தியாவில் தற்போது கர்நாடகம், பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இதில் கர்நாடகம் மட்டுமே பெரிய மாநிலம்.

இதனால் கர்நாடகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசு இருக்கிறது. அதேசமயம், காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்து தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் பாரதீய ஜனதா உள்ளது. இதனால் இரு கட்சிகளுமே மிகுந்த பதற்றத்தில் உள்ளன.

222 தொகுதிகளிலும் சுமார் 2600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.

Leave a Response