உன் காலில் மாலையாகிறேன் என் அண்ணனைக் காப்பாற்று – நாஞ்சில்சம்பத் உருக்கம்

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்ற வேண்டும் என்ற நிலை உருவானது. தஞ்சையில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த வாலிபரிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு, நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல்நிலை தேறிய நிலையில் கடந்த நவம்பர் 2-ந் தேதி நடராஜன் வீடு திரும்பினார். சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.

அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.

இந்தநிலையில், நடராஜனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவரை, உறவினர்கள் குளோபல் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடராஜனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானதும், தினகரன் அணியிலிருந்து வெளியேறிய நாஞ்சில்சம்பத், தன்னுடைய முகநூல் பக்கத்தில்,

தேளாகக் கொட்டியது ஒரு செய்தி. முந்துதமிழ் காக்க முந்திவந்தவன், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்டவன், தமிழ் ஈழ தாகம் கொண்டவன், தன்மானமுள்ள அண்ணன் ம.நடராஜன் கவலைக்கிடம்.கவலை என்னை கொத்தித் தின்னுகிறது . காலமகளே!உன் காலில் மாலையாக விழுகிறேன் என் அண்ணனைக் காப்பாற்று.

என்று எழுதியுள்ளார்.

Leave a Response