காட்டுத் தீயின் துயரம் கற்றுக்கொடுக்கும் பாடம்

குரங்கணி காட்டுத்தீயின் விளைவாக இதுவரை (மார்ச் 18,2018) 18 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாசன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை…..

தேனி அருகே குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றம் சென்று காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களையும் தீக்காயங்களுடன் துடித்துக் கொண்டிருப்பவர்களையும் நினைத்து மனம் பெரும் வேதனைப்படுகிறது. அவர்களின் இந்தப் பாதிப்புக்கு அடிப்படைக் காரணம் இயற்கையின் மீது அவர்கள் கொண்டிருந்த காதல்தானே? விடுமுறையில் ஊர் சுற்ற எத்தனையோ இடமிருக்க ஏன் ஒரு காட்டுப் பகுதியில் மலையேற விரும்பினார்கள்? அவர்களின் இயற்கை ஆர்வம்தானே அங்கே அழைத்துச் சென்றது.

அப்படியானால் வனப்பகுதிக்கும், மலைப்பகுதிக்கும் செல்லக் கூடாதா என்ற கேள்வி எழும். அதற்கான விடை தேடும்போதுதான் மலையேற்றம், காடு, காட்டுத் தீ ஆகியவற்றைப் பற்றிய சில அடிப்படைகளைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

வெளிநாடுகளிலும் இமயமலையிலும் உள்ள பனிமலைகளில் ஏறுவதும் பாறைகளில் ஏறுவதும் மலையேற்றம் என்று அறியப்பட்டாலும் அது ஒரு சாகச நிகழ்வாகவே கருதப்படுகிறது. அத்தகு மலை ஏற்றங்களுக்கு செல்வோர் நெடுநாள் பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற்தகுதியை உறுதி செய்ய வேண்டும். உணவுக் கட்டுப்பாடு வேண்டும். அதற்கு மேல் மலை ஏற்றத்தில் ஏற்படும் ஆபத்துகளை அறிந்தவர்களாகவும் அதை எதிர்கொள்ளத் துணிவுமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.

இது வேறு மலை

ஆனால் நமது காடுகளில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில், மலை ஏற்றம் என்பது முற்றிலும் மாறுபட்டது. இந்த மலை சாகசம் புரிவதற்கான மலை அல்ல. இது உலகம் அறிந்த அரிதிலும் அரிதான உயிர்ச் சூழல் வளமை மிகுந்த எட்டு இடங்களில் ஒன்று. இம்மலை பறவைகள், விலங்குகளின் வீடு. அரிய உயிர்களின் வாழ்விடம். நமது நதிகளின் தாய் மடி. நம் மூச்சுக் காற்றின் ஊற்றுக்கண். நம்மால் உருவாக்க முடியாத உயிர்ப் புதையல்.

சாகசம் புரியவோ, பொழுதுபோக்குக்காகவோ அங்கு நுழையக் கூடாது. சுற்றுலா செல்லும் பொதுவான மனநிலையில் காட்டுக்குள் போகக் கூடாது. நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் கவனம் இருக்க வேண்டும். நாம் காட்டு உயிர்களின் வீட்டுக்குள் நுழைகிறோம். அவை நம்மை வரவேற்கவில்லை. அவற்றுக்கு ஆகாத எவற்றையும் நாம் செய்துவிடக் கூடாது என்ற எண்ணமே இங்கு மிக முக்கியமானது.

மனநிலையில் மாற்றம் தேவை

சாலைகளில் வாகனம் ஓட்டும்போது விதிகளைக் கடைப்பிடிப்பது எப்படி அவசியமோ, அவ்வாறே காட்டினுள் நுழையும்போதும் காட்டுக்கான விதிகளை அறிந்திருக்க வேண்டும். இக்காட்டினுள் நுழையும்போதே நமது மன நிலையில் மாற்றம் வேண்டும்.

உடையின் வண்ணத்திலிருந்து காட்டுக்கான விதி தொடங்குகிறது. பொதுவாக, சுற்றுலா செல்லும்போது நமக்குப் பிடித்த வண்ணங்களில் உடை அணிவோம். ஆனால், காட்டில் நுழையும்போது காட்டோடு ஒன்றிப்போகும் வண்ணத்தில்தான் உடையணிய வேண்டும். யானை போன்ற விலங்குகள் வாழும் காட்டில் உடையின் வண்ணம் மிக அவசியம். யானைகளுக்கு பார்வைத் திறன் மிகக் குறைவே. அவைகளால் 15 மீட்டர் தொலைவு வரைதான் தெளிவாகப் பார்க்க முடியும். அதன் பிறகு ஏதோ ஒரு பொருளாக மட்டுமே உணர முடியும். காட்டோடு ஒன்றிய வண்ணத்தில் நமது உடையிருந்தால் வன விலங்குகளால் எளிதில் நமது இருப்பை உணர முடியாது.

பொதுவான சுற்றுலாவில் நாம் ஆடலாம், பாடலாம், கூச்சலிடலாம். நமது மனதுக்குப் பிடித்ததைச் செய்யலாம். ஆனால், காட்டில் நுழையும்போது நமது வாய் மௌனமாகி, கண்ணும் காதும் விரிந்திருக்க வேண்டும். நமது உடைகளிலும் உடம்பிலும் எவ்வித வாசனை திரவியங்களும் தெளிக்கப்பட்டிருக்கக் கூடாது. காட்டு விலங்குகள், செவித்திறன் மூலமாகவும் நுகர்தல் மூலமாகவும் காட்டின் நிகழ்வுகளை எளிதில் அறிந்துகொள்கின்றன. மௌனமாக இருந்தால் காட்டின் அசைவுகளை நாம் அறியலாம். பேசிக்கொண்டு போனால் நமது வருகையை வெகு தொலைவிலேயே விலங்குகள் அறிந்துகொள்ளும். அவை அமைதியாகிவிடும். வாசனை திரவியங்களைப் பூசியிருந்தால் தொலைவில் உள்ள விலங்குகள் அதை நுகர்ந்து அறிந்துகொள்ளும். இவையெல்லாம் அங்குள்ள காட்டுயிர்களைப் பதற்றமடையச் செய்வதோடு நமக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

முக்கியமாக வனத் துறையின் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். காட்டுப் பயணம் செல்லும் குழுவின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே நல்லது. ஒவ்வொருவரிடமும் விசில், தீப்பெட்டி அல்லது லைட்டர், டார்ச் ஆகியவை வைத்திருப்பது அவசியம். ஏதோ காரணத்தினால் காட்டில் வழி தவறிப்போனால் நமது இருப்பிடத்தை அறிவிக்க இவை உதவும்.

காட்டை அறிந்தவரின் துணை

மிக முக்கியமாக, அந்தக் காட்டை அறிந்த உள்ளூர் வழிகாட்டிகள், வனத் துறையின் களப் பணியாளர்கள் துணை இல்லாமல் காட்டில் நுழையக் கூடாது. ஒவ்வொரு காடும் ஒவ்வொரு விதமானது. அதன் அமைப்பும் உயிர்ச் சூழலும் வேறுபட்டிருக்கும். அங்கு பலமுறை சென்று வந்த களப் பணியாளர்களும் உள்ளூர் வழிகாட்டிகளும்தான் காட்டை அறிந்து வைத்திருப்பர். காட்டின் சூழல் மாறிக்கொண்டே இருக்கும். காட்டுத் தீ, திடீர் மழை, காட்டாற்று வெள்ளம், காட்டு விலங்குகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல், தேனீக்களின் தாக்குதல்… இப்படி எதுவும் நிகழலாம். நாம் பல முறை போய்வந்த காடாக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும்போது அந்தக் காட்டை நன்கறிந்த களப் பணியாளர்கள்தான் நமக்கு உதவ முடியும். அவர்கள் எப்போதும் கையில் அரிவாள் வைத்திருப்பார்கள். அது பல வகையில் நமக்கு உதவும்.

அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் அவ்வப்போது மண்ணையோ, சருகுகளையோ காற்றில் தூவிக் காற்றடிக்கும் திசையை அறிந்துகொள்வார்கள். நம்மிடமிருந்து காற்று முன்னே வீசினால் நமது வருகையை வனவிலங்குகள் எளிதில் அறிந்துகொள்ளும் என்பதை உணர்ந்து அதிக எச்சரிக்கையோடு செல்ல வேண்டும். எங்காவது தீ எரிவது தெரிந்தால் காற்றின் திசையறிந்து நாம் தப்பிக்கலாம்.

குழுவின் முன்பும், பின்பும் அனுபவம் பெற்றவர்கள் வர வேண்டும். அவர்களை முந்தியோ, பிந்தியோ நடக்க முயற்சிக்கக் கூடாது. அனுமதியின்றி எதற்காகவும் குழுவை விட்டுத் தனித்துப் போகக் கூடாது. நாம் செல்லப்போகும் பாதையின் தன்மையை முன்னரே அறிந்து அதில் நடக்கத் தகுதி உடையவர்களை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.

ஒவ்வொருவரும் குடிநீர் வைத்திருக்க வேண்டும். காலணி அணிந்திருப்பது அவசியம். மழை உடை வைத்திருப்பதும் நலம். முதலுதவிக்கான பொருள்களும் மருந்துகளும் கொண்டு செல்ல வேண்டும்.

குரங்கணியில் நடந்தது என்ன?

குரங்கணி – கொழுக்கு மலைப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது சென்னை மலை ஏற்ற மன்றம் (Chennai Trekking Club) என்ற தனியார் அமைப்பு. இதன் நிறுவனர் பீட்டர் வென்கேட் என்பவர். இவர் பெல்ஜியம் நாட்டைத் தாயகமாகக் கொண்டவர். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மலை ஏற்ற நிகழ்வுகளை நடத்திவரும் அமைப்பு இது. இத்தனை ஆண்டுகளாக மலை ஏற்றம் நடத்தும் இவர்களுக்கு இவையெல்லாம் தெரியாதா என்ற கேள்வி எழும்.

தொடக்கம் முதலே இவர்கள் நமது காடுகளுக்குப் பொருந்தாத தன்மையோடுதான் மலையேற்ற நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். சாகச நிகழ்வாக மட்டுமே இவர்கள் மலையேற்றத்தை ஏற்பாடு செய்கின்றனர். அங்குதான் எல்லா விதி மீறல்களும் தொடங்குகின்றன. இவர்களின் பெரும்பாலான காட்டுப் பயணங்கள் உரிய அனுமதியின்றியே நடத்தப்படுகின்றன. வனத் துறையின் அனுமதி கிடைக்காவிட்டாலும் நாம் போவோம். அதுவே சாகசம் என்று இவர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர்.

அனுமதியின்றிப் பயணித்து ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் வனத் துறையிடம் சிக்கிக்கொண்ட பல சம்பவங்கள் உண்டு. அறியாத காட்டினுள் புதியவர்களை அழைத்துச் சென்று பாறையில் சறுக்கியும் தண்ணீரில் விழுந்தும் சிலர் இறந்துபோன நிகழ்வுகளும் உண்டு. சிலர் தண்ணீர் இன்றிக் காட்டில் சிக்கித் தவித்து, பின்னர் வனத் துறையால் காப்பாற்றப்பட்டுள்ளனர். கேரளாவில் இவர்கள் நடத்திய மலையேற்ற நிகழ்வில் இருவர் வழி தவறிப்போய் காட்டில் சிக்கிக்கொண்டு இரண்டு நாள்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளனர். ஒரே மலையேற்றத்தில் 200 பேர் வரை பெருங்கூட்டமாகப் பலமுறை சென்றுள்ளனர். காட்டில் Tressure Hunt விளையாடியிருக்கிறார்கள்.

இவர்கள் யானைகளோடு மலையேற்றம் (Trekking with Jumbos), முதலைகளோடு நீச்சல் (Swimming with Crocodiles) என்று விளம்பரப்படுத்தி அனுமதியில்லாமல் தெங்குமராட்டா போன்ற அரிய வனப்பகுதிக்கு நுழைய முயன்றபோது இங்குள்ள இயற்கை ஆர்வலர்கள் வனத் துறைக்குத் தகவல் கொடுத்ததால் அம்முயற்சி தடுக்கப்பட்டது.

இவர்கள் ஏற்பாடு செய்வது சாகச நிகழ்வு. ஆனால், அதற்கான களம் நமது காடு அல்ல. பல ஆண்டுகள் அனுபவமுள்ள வனத் துறை உயர் அலுவலரே யானையிடம் சிக்கி மரணமடைந்த துயர நிகழ்வு அண்மையில் நடந்துள்ளதை நாம் அறிவோம். புகழ்பெற்ற கானுயிர் ஆய்வாளர்கள்கூட நமது காட்டில் உள்ளூர் வழிகாட்டிகள் இல்லாமல் நுழைய மாட்டார்கள்.

குரங்கணியில் அனுபவமுள்ள உள்ளூர் வழிகாட்டிகளோ, வனத் துறைக் களப் பணியாளர்களோ இருந்திருந்தால் காட்டுத் தீயின் வாசத்தை அறிந்து போதிய தொலைவிலேயே திரும்பியிருப்பார்கள். சிலர் தீயில் மாட்டாமல் தப்பித்து வந்தது கூட உடன்வந்த உள்ளூர்க்காரரின் உதவியால்தான் என்பதை அறிய முடிகிறது. சென்றவர்களின் எண்ணிக்கை குறைவாக அமைந்து, போதிய வழிகாட்டிகளும் இருந்திருந்தால் யாரையும் பதற்றப்படவிடாமல் சரியான திசையில் கூட்டி வந்திருப்பார்கள். இவை எதையும் கடைப்பிடிக்காததால் இப்போது இளம் இயற்கை ஆர்வலர்களைத் தீயில் வெந்து துடிக்க வைத்துவிட்டோம்.

இந்தத் துயர நிகழ்விலிருந்து நாம் என்ன கற்றுகொள்கிறோம் என்பதே முக்கியம்.

அனுமதியின்றி மலையேற்றம் நடத்துபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மலையேற்ற மன்றத்தில் சுமார் 40,000 பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் அனைவரும் இயற்கை ஆர்வலர்கள். அவர்களைத் தவறாக வழிநடத்தி விதி மீறி மலையேற்றம் செய்யாமல் இனியாவது முறையான அனுமதியோடு, காட்டின் ஒழுங்கோடு இசைந்து, போய்வர முயற்சிக்க வேண்டும். அதைத் தவிர்த்து நாங்கள் மரம் வளர்க்கிறோம், கடற்கரையைத் தூய்மை செய்கிறோம் என்றெல்லாம் கூறி, செய்த தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

குரங்கணி – கொழுக்கு மலைப் பாதை, அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் போய்வர உரிமை படைத்தது. அவர்களுக்கு அனுமதி தேவையில்லை. அந்த பாதையைத்தான் மலையேற்றம் சென்றவர்களும் பயன்படுத்தியுள்ளனர். இத்தனை பேர் புதிதாகக் காட்டுப் பாதையைப் பயன்படுத்துவதை அறிய முடியாத பலவீனமான நிலையில் வனத் துறை உள்ளது என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதே. காட்டின் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டிய அவசியத்தை வனத் துறை உணர வேண்டும். சிலர் வனத் துறையின் அனுமதியோடு சென்றுள்ளதாகத் தகவல் வருகிறது. தீ எரியும் தருணத்தில் அப்படி அனுமதித்திருந்தால் அது மாபெரும் தவறு.

வசீகர வார்த்தைகளின் விபரீதம்

தமிழகம் முழுவதும் காடுகளை ஒட்டிய இடங்களிலும், மலைப் பகுதிகளிலும் புற்றீசல் போல் கேளிக்கை விடுதிகள் முளைத்து வருகின்றன. Trekking, Night Safari, Camp Fire, Wildlife Watch போன்ற ஈர்ப்பு வார்த்தைகளால் இயற்கை ஆர்வலர்களை வலைதளம் மூலம் இவர்கள் ஈர்க்கின்றனர். வாரம் முழுவதும் இரவிலும் பகலிலும் உழைத்து, உடலும் மனமும் களைத்துப்போன பலர் இவர்களைத் தேடி வருகின்றனர். அனுமதியோடு அழைத்துச் செல்கின்றனரா, காட்டையும் காட்டுயிர்களையும் பற்றிய அறிவு அவர்களுக்கு உள்ளதா என்பதையெல்லாம் அறியாமல் மக்கள் அவ்விடுதிகளுக்குச் செல்கின்றனர். இதனால் பலர் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். மசினகுடியில் வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் யானையால் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.

முறையான இயற்கைச் சுற்றுலா

அனுமதியின்றிக் காட்டில் நுழைவது, வன விலங்குகளின் மிக அருகில் வாகனங்களை நிறுத்துவது, கூச்சலிடுவது போன்றவை இப்போதும் நடைபெறுகிறது. இத்தகைய கேளிக்கை விடுதிகளைக் கட்டுப்படுத்த நம்மிடம் எத்தகைய சட்டமும் இல்லை. அரசுதான் இதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும்.

இயற்கை ஆர்வம் வேறு, காட்டைப் பற்றிய புரிதல் வேறு என்பதை இயற்கையின் மீது பற்றுகொண்டு இத்தகு நிகழ்வுகளில் பங்கேற்கும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். காட்டின் விதி மீறி நடைபெறும் இத்தகு நிகழ்வுகளில் பங்கேற்பது நமக்கு மட்டும் ஆபத்தானதல்ல; காட்டுக்கும் காட்டுயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும். மலையேற்றம், இயற்கைச் சுற்றுலா பற்றிய அறிவிப்புகள் வரும்போது உரிய அனுமதியோடு நடத்தப்படுகிறதா என்பதை அறிந்தே அதில் பங்கேற்க வேண்டும்.

நமது காட்டை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு முறையான இயற்கைச் சுற்றுலாவை உள்ளூர் மக்களின் பங்களிப்போடு வனத் துறை ஏற்பாடு செய்தால் இதுபோன்ற நிகழ்வுகளையும் விதி மீறல்களையும் தவிர்க்கலாம்.

காட்டைப் பற்றிய சரியான புரிதல், முறையான அனுமதி, காட்டின் விதிகளைக் கடைப்பிடித்தல், இயற்கையின் மீதான அக்கறை, இவையெல்லாம் இருந்தால் சாலைகளில் வாகனம் ஓட்டுவதைவிடக் காட்டுப் பயணங்கள் பாதுகாப்பானவைதான்.

Leave a Response