எடப்பாடிபழனிச்சாமி மு.க.ஸ்டாலின் சந்திப்பில் என்ன நடந்தது?

தமிழக அரசியல் வரலாற்றில் ஆரோக்கியமான விசயம் மார்ச் 3, 2018 அன்று நடந்திருக்கிறது.

தமிழகத்தின் முக்கிய சிக்கலான காவிரிச்சிக்கலில் மோடி அரசு தமிழகத்துக்குத் துரோகம் செய்யும் நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது? என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து ஆலோசனை செய்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அச்சந்திப்பின் போது என்ன நடந்தது? என்பதை விளக்கி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

காவேரி விவகாரத்தில் ஆலோசனை மேற்கொள்ள வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்றைய தினம் விடுத்த அழைப்பை ஏற்று, இன்று (03-03-2018) நானும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. துரைமுருகன் அவர்களும் தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்தோம்.

காவேரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், உடனடியாக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களிடம் வலியுறுத்த வேண்டும் என திமுக சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தோம். அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் திமுக சார்பில் தோழமைக் கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்த முடிவெடுத்த நிலையில், திடீரென அனைத்து கட்சிகள் கூட்டத்தை நடத்துவதாக இந்த அரசு அறிவித்தது. எனவே, திமுக சார்பில் கூட்டவிருந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசின் சார்பில் கடந்த 3 ஆம் தேதியன்று நடைபெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்று, “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழக அரசின் சார்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும்”, என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்லி, அதன்படி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு இரு வாரம் முடிவடைந்த நிலையில், இன்று முதலமைச்சர் அவர்கள் எங்களை அழைத்துப் பேசுகையில், ”பிரதமர் சந்திக்க மறுக்கிறார். வேண்டுமெனில் அந்தத் துறையின் அமைச்சரை நீங்கள் சந்தியுங்கள், என்று எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்?”, என்று கேட்டார்.

“காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் சாத்தியக்கூறு இல்லை”, என்று சொல்லி வரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்குமாறு பிரதமர் சொல்வதில் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. இதன்மூலமாக, தமிழக விவசாயிகளையும், ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றுகின்ற சூழ்ச்சியில் இன்றைக்கு மத்திய அரசு ஈடுபட்டு இருக்கிறது.

எனவே, என்ன செய்யலாம் என்று முதல்வர் கேட்டதும், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி, பிரதமரை சந்திப்பது,மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை, ஏற்றுக் கொண்டு, “திங்கள்கிழமை வரையிலும் நாம் பொறுத்துப் பார்க்கலாம், அதற்குள் உரிய பதில் வரவில்லை என்றால், உங்களுடைய கோரிக்கையை ஏற்று, எதிர்வரும் 8 ஆம் தேதியன்று சட்டமன்றத்தை கூட்டுகிறோம்”, என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும், “அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்கவும், காவேரி விவகாரத்தில் உடனடியாக தலையிடவும் பிரதமர் தொடர்ந்து மறுத்தால், சட்டமன்றத்தைக் கூட்டுகின்ற அறிவிப்போடு, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக மற்றும் திமுகவின் 54 எம்.பி.க்களும் ராஜினாமா செய்வோம்”, என்றும் அறிவித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதில் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனியாக சென்றால் பிரதமர் உடனே சந்திக்கிறார். அதுமட்டுமல்ல, யார் யாரையோ தனித்தனியாக சந்திக்கின்ற பிரதமர், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையில் குறிப்பாக, அனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், அனைவரையும் சந்திக்க மறுப்பது, எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே கிடைத்திருக்கின்ற அவமானம் என்பது மிகுந்த வேதனைக்குரியது.

யார் எப்படி முடிவெடுத்தாலும், இந்தப் பிரச்னையை திமுக விடுவதாக இல்லை. திமுகவை பொறுத்தவரையில் காவேரி பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காக எந்தளவுக்கும் இறங்கி வருவதற்கு தயாராக இருக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் அநியாயத்திற்கே எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள். ஆனால், இங்கு நமது நியாயத்தை நிலைநாட்ட எல்லோரும் ஒன்றுகூட வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம். அது நிறைவேறும் என்ற நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response