தமிழறிஞர் பாவாணருக்குப் பலமுறை உதவிய தந்தைபெரியார்

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட பாவாணரை தந்தைபெரியார் மிகவும் மதித்துப் போற்றியிருக்கிறார். புலவர் செந்தலைகவுதமன் எழுதியுள்ள பதிவில் அச்செய்தி வெளிப்பட்டிருக்கிறது. அவருடைய பதிவில்….

கோவை பூ.சா.கோ.சர்வ சன மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்ததால், நாற்பதாண்டுகளுக்கு முன்எ னது கோவை வாழ்வு தொடங்கியது.

பொங்கல்விழா மட்டுமே எங்கள் குடும்பத்தில்கொண்டாடப்படும் ஒரே விழா! சொந்த ஊர் தஞ்சை செந்தலைக்குப்பொங்கல் கொண்டாடக் கட்டாயம் நான்சென்றுவிடுவது, என் தாயார் இருந்தவரை இருந்த வழக்கம்! கயிற்றுக் கட்டிலில் வீட்டுத்திண்ணையில்படுத்தபடி,வானொலியில் செய்தி கேட்டுக்கொண்டிருந்தேன்-

1981 பொங்கல்விழாவின்போது! திடீரென நான் தேம்பித்தேம்பி அழுவதைப் பார்த்து, வீட்டிற்குள்ளிருந்து பதற்றத்தோடு என் தாயாரும்
தங்கையர் இருவரும் வந்தனர் ; என்அழுகைக்கான காரணத்தைக்கவலையோடு கேட்டனர்.

“பாவாணர் இறந்துட்டாராம்” என நான்அழுதபடிக் கூறிய போது , அவர்கள்புரியாமல் விழித்தார்கள். புலமை பெற்றவர்களே அறியாத பெயர் ‘பாவாணர்’!பாவாணரின் ஆய்வுப்பரப்பையும் அறிவின்ஆழத்தையும் தமிழ்ப்புலமை மிகுந்தோரே அறியாத போது, என் தாயும் தங்கைகளும்
அறியாததில் வியப்பில்லை!

பாவாணர் 15.1.1981 நள்ளிரவு மதுரை அரசு மருத்துவமனையில் மறைந்த செய்தி மறுநாள் மதியம் வானொலியில் கேட்டபோது பெருகிய கண்ணீர்,இன்று நினைத்தாலும் பெருகத்தான் செய்கிறது.

பத்து உரூபா கையில் இல்லாததால்மருத்துவம் பார்க்க வழியில்லாமல் மனைவியைப் பறிகொடுத்தவர் பாவாணர்! அவருக்குத் ‘ திராவிடமொழி ஞாயிறு’ பட்டத்தையும் புலவர் வை.பொன்னம்பலனாருக்குத்’ தமிழ்மறவர் ‘ பட்டத்தையும்சேலத்தில் (1957இல்) விழா எடுத்து வழங்கியவர்
தந்தை பெரியார்!

வடமொழிக்குச் சார்பாகப் பேச மறுத்ததால்அண்ணாமலை பல்கலைக் கழகத்தால்வெளியேற்றப் பட்டவர் பாவாணர்!
‘ என் காட்டுப்பாடி இல்லம் தேடி வந்து எனக்கு ஆறுதல் கூறிப் பண உதவி பன்முறை செய்தவர் பெரியார் ‘ எனப் பாவாணர்
( நூல்: பாவாணர் கடிதங்கள்) எழுதியுள்ளார்.இச்செய்தி பெரியாரின் எழுத்திலோ பேச்சிலோ இல்லாததுதான் அவரின் வியப்பான இயல்பு!

அறிவாளரை அறிந்துகொள்ளவும் பரப்பவும்போற்றவும் முன்வரும் இனம் மட்டுமே அறிவார்ந்த இனமாக வளர முடியும்.
– செந்தலை ந.கவுதமன்

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response