தொடக்கத்தில் கலைஞர் வழக்குப் போட்டதால் நீட் இரத்தானது – மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு வேண்டாம் என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா. மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

அவருடைய பேச்சின் சுருக்கம்…..

மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டிருந்தாலும், அது நீட்டால் நடந்த கொலையே. அனிதா மரணத்துக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதில் தமிழக அரசு காட்டிய அலட்சியப் போக்கும் அனிதாவின் மரணத்துக்கு முக்கிய காரணம்.

மத்திய அரசும் மாணவர்களை ஏமாற்றியது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க இருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த உறுதிமொழி என்னவாயிற்று?.

தமிழகத்தில் நடைபெறுவது அ.தி.மு.க. ஆட்சியில்லை; பா.ஜ.க. ஆட்சி. அடுத்தகட்டப் போராட்டம் அரசுக்கு அச்சுறுத்தலான போராட்டமாக நடக்கும்.

நீட் தேர்வுக்கென பிரத்யேகமாக பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று செய்திகள் வருகின்றன. அந்தப் பயிற்சி மையங்களில் பயில 3 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்? ஏழைகளால் இந்தக் கட்டணத்தை எப்படிக் கட்ட முடியும். ஒரு சில பயிற்சி மையங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

நீட் தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது, அதை முதன்முதலில் எதிர்த்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர் தான். அவர் தொடர்ந்த வழக்கில்தான், நீட்டை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இங்கே நடைபெறுகிற போராட்டம், நீட் இரத்துக்காக மட்டும் நடைபெறும் போராட்டமல்ல; மக்கள் பிரச்னைகள் அனைத்துக்குமான போராட்டம்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response