காவிரி நீர் உரிமை காக்க தமிழக அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை?

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்புக்குப் பிறகு நடந்தது என்ன???தீர்ப்பின்படி , காவிரியில் வரும் தண்ணீரை நான்கு மாநிலங்களுக்கிடையே ஒவ்வொரு மாதமும்(ஏன்? ஒவ்வொரு பத்து நாட்களுக்கும்) பிரித்து வழ்ங்கும் பொறுப்பும் அதிகாரமும் காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board ) என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்டி நெறிகளை/அறிவுரைகளை வழங்குவதற்காக காவிரி ஒழுங்கு முறைக்குழு (Cauvery River Regulation Committee ) என்றொரு அமைப்பும் ஏற்படுத்தப்படவேண்டும்.
இந்த இரு அமைப்புகளையும் அரசிதழில் இறுதித்தீர்ப்பு(18.02.2013) வெளியிட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள்(18.05.2013க்குள்) மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும்
எப்போதும்போல் மத்திய அரசு தமிழ்நாட்டின்மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும்,பொறுப்புணர்வும்,கடமை உணர்வுமின்றி அரசியலமைப்புச் சட்டங்களையே கேலிக்கூத்தாக்கிடும் வண்ணம் காலதாமதம் செய்திடவே, தமிழக அரசாங்கம் இது குறித்து அறிவுறுத்தலை மத்திய அரசுக்கு வழங்கிடவேண்டும் என்று 08.04.2013 அன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது.
ஆனால் 10.05.2013 அன்று உச்சநீதிமன்றம் எந்தவித நியாயமுமின்றி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை நீர்த்துப்போகச்செய்யும் வகையில் , காவிரி மேலாண்மை வாரியத்தை(Cauvery Management Board ) அமைத்திட மத்திய அரசுக்குக் காலக்கெடுவும், அறிவுறுத்தலும் செய்யாமல் , பிரச்சினையைக் குழப்பும் வகையில் புதியதாக ,அதிகாரமற்ற ,காவிரி மேற்பார்வைக் குழுவை (Cauvery Supervisory Committee ) அமைத்திடச் சொல்லியது.
மேற்பார்வைக் குழுவும் , கண் துடைப்பு நாடகமாக கடந்த 01.06.2013 லும், 12.06.2013 லும் புதுடில்லியில் கூடி எந்தவிதப் பயனுமின்றிக் கலைந்தது. இந்த மேற்பார்வைக்குழு, கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள் எல்லாமே காலதாமதம் செய்யும் முயற்சியே. இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
நடுவர் மன்றம் அரசியல் சட்டப்பிரிவு 262ன் கீழ் அமைக்கப்பட்டது. அதன் தீர்ப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பைப்போல அதிகாரம் படைத்தது. அதைச் செயல்படுத்தவேண்டிய பொறுப்பு அரசியல் சட்டப்பிரிவுகள் 79&80 படி மத்திய அரசுக்கு உண்டு. இதைத் தட்டிக்கழித்திட விடக்கூடாது.இதற்கான‬ சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்.
பொதுமக்களாகிய‬ நாம் தமிழ்நாடைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள்/ அலுவலகங்களை முற்றுகை யிடுதல் போன்ற தீவிர போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுக்கவேண்டும். அவர்களால் மத்திய அரசை, நிர்ப்பந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்கச்செய்யமுடியவில்லை என்றால் அவர்கள் தங்கள் பதவிகளை இராசினாமா செய்யவேண்டும். அடுத்து வரும் இடைத்தேர்தல்களை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Response