
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி பயங்கர தீ விபத்து நடந்தது. அந்தக் கோர சம்பவத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். 18 குழந்தைகள் காயமடைந்தனர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சை நீதிமன்றம், பள்ளி நிறுவனர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
பள்ளி தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 8 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், கட்டிட பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி உத்தரவிட்டது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை தஞ்சை நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. அதேபோல தண்டனை விதிக்கப்பட்ட பள்ளி நிறுவனர் உள்பட 10 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனிடையே தண்டனை பெற்று சிறையில் இருந்த பள்ளி தாளாளர் சரஸ்வதி இறந்து விட்டார்.
மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 10 அன்று வழங்கப்பட்டது.
அதில் பள்ளி நிறுவனர் பழனிசாமியின் தண்டனைக் காலத்தை குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு குழந்தைகளின் பெற்றோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் மட்டுமின்றி பொதுவெளிகளிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பேராசிரியர் ராஜநாயகம் இதுபற்றி எழுதியிருப்பதாவது…
நீதியின் விலை…
#
94 பிஞ்சு உயிர்களைத் தீக்கிரையாக்கிய அத்தனை பேருக்கும் விடுதலை வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்பு…
பிள்ளைகளை இழந்த பெற்றோர்களின் 13ஆண்டு நம்பிக்கை மீது கொட்டப்பட்ட நெருப்பு.
#
மனிதாபிமானம் அற்றுப்போனது
இற்றுப்போன நீதித்துறை.
பிறழக் கூடியவை சாட்சிகள் மட்டுமல்ல, சட்டங்களும், நடுவர்களும்.
விலைக்கு விதிவிலக்கு எதுவுமில்லை, யாருமில்லை – ஜெயில் முதல் பெயில் வரை.
#
தமிழகத்தின் தலைநகரான தில்லியில் மையம்கொண்டுள்ள அரசியல் சுழலில் அமுங்கிப்போனது மழலைகளின் மரணஓலம்…
ஊடகங்களிலும் நம் உள்ளங்களிலும்.
இவ்வாறு அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.


