
ரேஷன் கார்டு பெற புதிய விதிமுறை வகுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருள்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளது. ஒய்வு பெற்ற அரசு ஊழியர் குடும்பத்துக்கும் ரேஷன் பொருள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று (ஜூலை 31-2017) மாலை தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மூன்று நாட்கள் முன்பே மருத்துவர் இராமதாசு இவ்வாறு நடக்கும் என அறிக்கை விட்டிருந்தார். அவருடைய அறிக்கையில்,
குடும்பத்தில் எவராவது வருமான வரி செலுத்தினாலோ, வீட்டில் குளிரூட்டி அல்லது மகிழுந்து வைத்திருந்தாலோ அவர்கள் முன்னுரிமையற்ற பிரிவினராக வகைப்படுத்தப்படுவார்கள். இதையெல்லாம் விடக் கொடுமை என்னவென்றால் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அக்குடும்பமும் முன்னுரிமையற்றதாக அறிவிக்கப்படும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், தொழில்வரி கட்டுபவர்கள், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரும் அதிக வருவாய் ஈட்டும் பிரிவினராக கருதப்பட்டு அவர்களும் முன்னுரிமையற்ற பிரிவினராகக் கருதப்படுவர்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழகத்திலுள்ள அனைவரும் முன்னுரிமைப் பிரிவினர் என அறிவித்து அவர்களுக்கு பொதுவினியோகத் திட்ட சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கூறியிருந்தார்.
அவருடைய கோரிக்கையைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


