தமிழக விவசாயிகள் பற்றி புள்ளிவிவரங்களுடன் பொறுப்புடன் பாராளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்பி

நாட்டில் விவசாயிகளின் நிலைமை குறித்து மக்களவையில் விதி எண் 193 இன் கீழ் 19 ஜூலை 2017 அன்று நடந்த விவாதத்தில் பங்கேற்று அ.இ.அ.தி.மு.க திருப்பூர் தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினர்திருமதி சத்தியபாமா பேசியது…

வேளாண்மை நாட்டில் முதுகெலும்பு போன்றது. நாட்டில் 70 கோடிக்கும் அதிகமான பேர் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார் தொழில்களில் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கொண்டுள்ளனர்.இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் எனும் அதே நேரத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகமானதாகும்.

எனவே வேளாண்மை மற்றும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வழிகளில் ஈடுபடுவது மிகவும்அவசியமானது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசின் முடிவு
சரியான திசையிலான முடிவாக அமையும்.

இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில்  தட்ப வெப்ப நிலைமை அடிக்கடி மாறிவரும் நிலையில் பருவமழை குறைபாடு காரணமாக வறட்சி ஏற்படுகிறது. சில இடங்களில் அதிக மழையும் பெருவெள்ளமும்ஏற்படுகின்றன. இரு வகை நிலைகளிலும் வேளாண்மை மட்டுமன்றி விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

இயற்கை பேரிடர்களாலும் பருவமழைக் குறைபாடுகளாலும் வறட்சி அல்லது வெள்ளத்தால் நாட்டின் பல
பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.நதிகளை தேசியமயமாக்காததும் பல மாநிலங்கள் வழியாக பாயும் அனைத்து நதிகளையும் இணைக்காததும்தான் முக்கிய காரணமாகும். இதனால் மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பகிர்வு குறித்த தாவாக்களும்
தீர்க்கப்படும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் படும் இன்னல்களும் இதன் மூலம்தீர்க்கப்படும்.

ஒருங்கிணைந்த தேசிய நதி நீர் கொள்கையை வகுப்பது குறித்து அரசு ஆராயவேண்டும். நதிகளை இணைப்பதன் மூலம் நதிகளில் இருந்து உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து அந்த நீரை நாட்டின் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட வழி பிறக்கும்.

நீர் என்பது விவசாயத்துக்கு இன்றியமையாத் தேவை. நீர்ப்பாசனம் என்பது வேளாண்மைக்கு இரத்தஓட்டம் போன்றது. கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்தாலும் போதிய தண்ணீரின்றியோ விவசாயிகள்வளமை பெற முடியாது.

தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக காவிரி நதி திகழ்கிறது. காவிரி நதி நீர்ப் பகிர்வு குறித்த தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்குப் பிறகும்துரதிருஷ்டவசமாக, காவிரியில் போதுமான நீரை விடுவிக்காததால் தமிழக விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி நதிநீர் பகிர்வு தீர்ப்பாய ஆணையை கர்நாடகா பின்பற்றாததன் விளைவாக நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் உயிரிழந்தனர்; பல்லாயிரக்கணக்கானோர் விவசாயத்தை கைவிட நேர்ந்துள்ளது.

இதனால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள மொத்தம் இழப்பு அதிகம். காவிரியை மீட்ட தாய் என்று நவீன தமிழகத்தின் பென்னிகுயிக் என்றும் மக்களால் அழைக்கப்பட்ட இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிக நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு தமிழகத்துக்கு காவிரி நதிநீர் பகிர்வில்கிடைக்கவேண்டிய உரிமையான பங்கை நிலைநிறுத்தினார்.

முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்துவதிலும் வெற்றிகண்டார். இந்த இரண்டு வெற்றிகளும் வரலாற்று ரீதியாக முக்கியமானவை. காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைப்பதோடு காவிரி நதி நீர்ப் பகிர்வு தீர்ப்பாயத்தின் முடிவின் கீழ் கர்நாடகா மாதம் தோறும் தமிழகத்துக்கு போதுமான அளவில் தண்ணீரை விடுவிக்கவும் அரசு வழி செய்யவேண்டும்.

தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியான நிலையில் மத்திய அரசு 11421 கோடி ரூபாய் செலவில்காவிரி நதியின் கால்வாய் அமைப்பை நவீனப்படுத்துவதற்கு  ஒப்புதல் தரவேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 3.6.2014 தேதியிட்ட வேண்டுகோளை விரைவாக நிறைவேற்றவேண்டும்.

தமிழகத்தின் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களின் மேம்பாட்டுக்காக ரூபாய் 2610 கோடி செலவில் கல்லணையின் கால்வாயை விரிவாக்குவது, புனரமைப்பது, நவீனப்படுத்துவது ஆகியவை தொடர்பாக கோரிக்கையை தமிழக அரசு மத்திய நீர்வள ஆணையத்தின் முன் சமர்ப்பித்த நிலையில்ஆணையமும் கொள்கை அளவில் இதற்கு ஒப்புதல் தந்தது.

கல்லணைத் திட்டத்துக்கான விரைவான அமலாக்கத்துக்கு நிதியை ஒதுக்கீடு செய்ய அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.காவிரி-வைகை- குண்டாறு நதிகளை ரூ5166 கோடி செலவில் இணைப்பது, அத்திக்கடவு-அவினாசி
வெள்ளக் கால்வாய் திட்டத்தை 1962 கோடி ரூபாய் செலவில் அமல்படுத்துவது, ஆகியவற்றுக்கும் தமிழகஅரசு மத்திய அரசிடம் உதவியை நாடியுள்ளது. இவற்றை முன்னுரிமை அடிப்படையில் செய்யவேண்டும்.

அதே போன்று, பெண்ணையாறு, சாத்தனூர் அணை- பாலாறு இணைப்புத் திட்டம், பெண்ணையாறு- நெடுங்கால் அணை-பாலாறு இணைப்பு ஆகியவற்றுக்கான திட்டத்தை ரூ500 கோடி செலவில் விரைவாக நடத்தி முடிக்கவேண்டும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கிராமப்பொருளாதாரம் சுமார் 50 சதவிகிதம் பங்களிக்கிறது.விவசாயிகள் மற்றும் கிராமத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த தாராளங்களையும் மான்யங்களையும் அரசு குறைத்துவிட்ட நிலையில் வேளாண் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் விவசாயிகளின் வருமானம் சரிந்தது. விதைகள் மற்றும் உரங்களுக்காக அவர்கள் வங்கியில்இருந்து கடன்களைப் பெற்றனர். இப்போது  அவர்களுக்கு எப்படி அந்தக் கடன்களை திரும்பச்செலுத்துவது என்று தெரியவில்லை. இதுதான் இந்திய விவசாயிகள் குறிப்பாக குறைந்த அளவு நிலம்வைத்துள்ள சிறு குறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் நிலையாக உள்ளது. போர்க்காலஅடிப்படையில் இதனை கவனிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்வது, நாட்டின் அனைத்துவிவசாயிகளுக்கும் விவசாயிகள் கடன் அட்டைகளை வழங்குவது, விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள்,வேளாண் உபகரணங்கள் போன்றவற்றை வாங்க அவர்களுக்குப் போதுமான நிதியுதவியை அளிப்பது ஆகியவற்றுக்கு ஊக்கம் தரவேண்டும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதையும்
உறுதி செய்யவேண்டும். நல்ல கொள்முதல் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் மனங்களில் அரசு
நம்பிக்கையை உருவாக்கவேண்டும்.

இந்த இரண்டு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படாவிட்டால் விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ளத்தயக்கம் காட்ட நேரிடும் என்பதோடு இதனால் நமது விவசாயம் சார்ந்த பொருளாதாரமும் வேளாண்மையும்பெரும் சரிவுகளை சந்திக்கும்.

உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் விதைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு இந்திய உணவுக் கழகம் மற்றும் இதர கொள்முதல் அமைப்புகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கமிட்டி ஒப்புதல் தந்துள்ளது.

பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதற்காக நாம்செலவு செய்யும் பணம் விவசாயிகளைச் சென்று சேருமானால் விவசாயிகள் தற்கொலை செய்வது நடக்காது என்பதோடு உணவுதானியத் தட்டுப்பாடும் இருக்காது.

இப்போது கிட்டத்தட்ட அனைத்து வித பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இயற்கைப் பேரிடர்காலங்களிலும் வறட்சி நேரத்திலும் பயிர்கள் முழுவதுமான சேதமடைகின்றன. அத்தகைய நேரத்தில்விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.

பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்கப்படவேண்டும்.வெள்ளத்தாலும் மற்றொரு புறம் கடும் வறட்சியாலும் பயிர்களை இழந்து பணத்தட்டுப்பாட்டில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை தொடர்முடியாத நிலை ஏற்பட்டுவிடும். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளைப்பொறுத்தவரை தமிழக விவசாயிகளுக்கு உகந்ததாக இல்லை.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில்  வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது. அதனை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும்அவதிப்பட்டனர். அண்டை மாநிலமான கர்நாடகா காவிரியில் தண்ணீர் விடுவிக்காததால் குறுவைப்பயிரை இழந்த விவசாயிகள், 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதாலும் பெரிதும் அவதியுற்றனர்.

வறட்சி, கடன், கவலை ஆகியன விவசாயிகளின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டது. வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மாண்பமை உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தபோதிலும் கர்நாடகா காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு
விடுவிக்க மறுத்துவிட்டது.

இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவை எட்டியது. விவசாயத்துக்கு அணை நீர் போதுமானதாக இல்லை. பயிர்கள் தண்ணீரின்று கருகின, விவசாயிகள் செய்வதறியாமல் திணறினர்.தாங்கள் பெற்ற கடன்கள் சுமை அதிகரிப்பது பற்றி விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் போராடி வருகின்றனர்.  தமிழ்நாட்டில் உள்ள 16682 வருவாய் கிராமங்களில் 13305 கிராமங்கள் வறட்சி பாதித்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.மாநிலத்தின் அனைத்து 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்தவையாக அறிவித்துள்ள தமிழக அரசு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணமாக 39565 கோடி ரூபாயை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு சிறப்பு நிதியை விடுவிக்குமாறும் தமிழ்நாட்டு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு கான நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

நமது நாடு விவசாயம் மற்றும் அது தொடர்புடைய துறையில் தன்னிறைவை எட்ட உதவும் வகையில் நமது விவசாயிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் நாட்டில் விவசாயிகளின் சமூகப் பொருளாதார நிலை மேம்படவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும்.

நன்றி.

Leave a Response