ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருவதா? -எடப்பாடிக்கு எதிர்ப்பு


பாரதீய சனதா சனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்திருக்கும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. இயக்குநர் வ. கவுதமன் விடுத்துள்ள அறிக்கையில்….
நமக்கு சோறு தருபவர் தாய் . அந்த சோற்றுக்கு அரிசி தருபவர்கள் நம் தாய்க்கு சமமான நமது விவசாயிகள் . தஞ்சையில் விளைந்தால் தரணிக்கே சோறிடலாம் என்கிற முதுமொழி பொழித்து, அந்த மண்ணில் கஞ்சிக்கு வழியில்லாமல் ஐநூறுக்கு மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பு வந்தும் , தூக்கிலிட்டு தொங்கியும் மாண்டு போயிருக்கிறார்கள், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறியதனால் .

தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நாற்பது நாட்களுக்கு மேல் போராடியபோது நிர்வாணமாக ஓடவிட்டதை தவிர மத்திய அரசு வேறெந்த சலுகையையும் தரவில்லை நமக்கு .
தானே புயலுக்கு நிதிக்கேட்டோம் தரவில்லை , வருதா புயலுக்கு நிவாரணம் கேட்டோம் தரவில்லை ,வெள்ள பேரழிவின் போது காப்பாற்றுங்கள் என கெஞ்சினோம் கண்டுகொள்ளவேயில்லை . இப்போது உச்ச நீதிமன்றம் ” உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் ” அமையுங்கள் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டபோது பிராமண பாத்திரம் தாக்கல் செய்து அதனை தடுத்து நிறுத்தி இன்று முப்போகமும் விளைந்த எங்கள் தஞ்சை நிலங்கள் தரிசாக போனதோடு மட்டுமல்லாமல் அங்கு நிற்கும் பனைகூட கருகி பாலைவனமாகிக்கொண்டிருக்கிறது.

நூறாண்டுகளுக்கு பிறகு வந்த இந்த கடும் வறட்சியை சொல்லி தங்களின் அரசு நிதி கேட்ட பிறகும் , இந்திய தேசத்தின் முகம் எம் தமிழர்களின் பக்கம் திரும்பவேயில்லை . கேட்ட தொகையினில் பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் 25%-30% க்கு மேல் அள்ளிக்கொடுத்தவர்கள் , நம் தமிழகத்திற்கு மட்டும் 3 1/2 %( மூன்றரை சதவீதம் ) கும் கீழே தந்திருக்கிறார்கள் .

எங்கள் மாணவர்கள் மட்டுமல்ல எங்களோடு சேர்ந்து நீங்களும் “நீட் ” தேர்வு வேண்டாமென்கிறீர்கள்.மாறாக நம் மீது திணித்துவிட்டது மத்திய அரசு.மீத்தேன் ,ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வேண்டாம் என்று இன்றும் இரவு பகலாக எம் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பிடிவாதமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. கூடங்குளம் அணுமின்நிலையங்கள் வேண்டாம் என எத்தனையெத்தனை போராட்டங்கள் . ரஷ்யாவின் புத்தின் அவர்களும் , இந்திய பிரதமர் மோடி அவர்களும் சந்திக்கும்போதெல்லாம் அணுஉலை கூடிக்கொண்டே போகிறது .
மிருக நேயத்தை பற்றி பேசும் மத்திய அரசு மனித நேயத்தை மறந்து ஏழு தமிழர்களின் விடுதலையை எச்சமாக தூக்கி எறிந்துவிட்டது .

இன்றும் எங்கள் மீனவர்களின் வலைகள் சிங்கள அதிகார வர்க்கத்தினால் அறுக்கப்படுகிறது.படகுகள் அபகரிக்கப்படுகின்றன.பல நேரங்களில் சிறைபிடிக்கப்படுகிறார்கள்.சில நேரங்களில் பிணங்களாகி கரைக்கு ஒதுங்குகிறார்கள். இது அத்தனையையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இதுவரை விவசாயம் செய்யத்தான் தண்ணீர் இல்லை .இனி வரும் வாரங்களில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விட்டு கதறப்போகிறது தமிழினம்.

இப்படி தமிழ்நாட்டின் நலனில் புல்லின் நுனி அளவுகூட அக்கறை இல்லாத பாரதிய சனதாவின், சனாதிபதி வேட்பாளருக்கு தங்கள் அரசின் சட்டமன்ற உறுப்பினர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தரும் விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பது,தங்களின் அரசுக்கு ஓட்டளித்து கோட்டைக்கு அனுப்பிய எங்கள் மக்களுக்கு பேரதிர்ச்சியும் , பெரும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக தாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை .
இந்த தருணத்திலாவது நம் உரிமைகளை மீட்டெடுக்க , நம் மண்ணும் மக்களும் மகிழ்ச்சியோடு வாழ திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்துங்கள்.அதுவே தங்களுக்கும் , தங்கள் ஆட்சிக்கும் நன்மை பயக்கும்.

ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினம் ஒரு போதும் மண்டியிடாது என்பதனை நிரூபித்து , சனாதிபதி தேர்தலுக்குள் நமக்கான உரிமைகளை வென்றெடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு தமிழர் உரிமைக்கான மாணவர்கள் – இளைஞர்கள் மற்றும் தமிழ்மக்கள் காத்திருக்கிறார்கள்.
அறம் வெல்லட்டும் !

அன்போடு ,
இயக்குநர் வ.கௌதமன் .
22/06/2017

Leave a Response