ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே கூடவே சர்ச்சைகளும் இறக்கை கட்டிக்கொள்கின்றன. இந்தமுறை ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்திற்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
காலா படத்தின் தலைப்பு மற்றும் கதை தன்னுடையது எனவும், 1996ஆம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தில் அவற்றை பதிவு செய்து விட்டதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தக்கதையை கே.எஸ்.ரவிக்குமாரிடமும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, இது தொடர்பாக பதில் அளிக்க எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார். இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஜூன் 23ஆம் தேதிக்குள் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் ஆகிய மூவரும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்