சிறையிலிருந்தாலும் அஞ்சாமல் மோடியை வெளுக்கும் திருமுருகன்


பாஜக-மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை தடுக்கும் பணிக்கும், முறியடிக்கும் அரசியலுக்கும் தமிழக இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

கால்நடை விற்பனை தடையும், உணவு தானியத்திலிருந்து எரிபொருள் உற்பத்தியும்: சதிகளின் பின்னணி குறித்து சிறையிலிருந்து அவர் எழுதியுள்ள கடித்த்தில்…

தோழர்களுக்கு!

இந்திய பாஜக அரசின் தொடர் சட்டங்கள் கிராமப்புறப் பொருளாதாரத்தையும், ஏழை உழைப்பாளிகளையும் முடக்குவதாக இருக்கிறது. கால்நடை விற்பனைக்கான தடை எனும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டம் முற்றிலுமாக கிராமப் பொருளாதாரத்தை முடக்குவதற்காகவும், வரி கட்டுமானத்திற்குள் கொண்டு வருவதற்காகவும், கால்நடை வளர்ப்பினை பெருநிறுவனங்கள் நடத்தும் பண்ணைத் தொழிலாக மாற்றுவதற்கான வழிமுறையாக கையாண்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் கால்நடை விற்பனை நேரடி வரி கட்டுப்பாட்டிற்குள் விரைவில் கொண்டு வரப்படவும், கால்நடை விற்பனையை அரச நிறுவனத்துடன் தொடர்புபடுத்துவதன் மூலமும், கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவதற்கும் வழி செய்து கொடுக்கிறது. அதாவது சிறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், கையில் இருக்கும் கால்நடை வணிகம், வளர்ப்பு ஆகிய இரண்டும் ‘ப்ராய்லர்’ கோழிப்பண்ணைகள் போல நிறுவனங்கள் கட்டமைப்பில் கொண்டுவர இத்திட்டங்கள் உதவும்.
இவ்வகையில் மேற்குலகில் எவ்வாறு கால்நடைகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு இறைச்சி சந்தைக்கு கொண்டுவரப் படுகிறதோ அதே முறை இங்கும் செயல்படுத்தப்படுவதற்கான முறையே இவை.

மேலும் இத்தகைய பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் தானியங்களைக் கொண்டு வளர்த்தப்படும். நமது பாரம்பரிய முறையில் மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்தே இரையெடுக்கும் கால்நடைகள், பண்ணைத் தொழிற்சாலைகளில் தானிய உணவின் கீழ் வளர்த்தெடுக்கப்படும். எவ்வாறு அமெரிக்காவின் மாட்டிறைச்சி தொழிற்சாலை தொழிலாக மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 4 நிறுவனங்கள் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மாடுகளை வெட்டுகிறார்களோ, அதே போன்றதொரு முறை தொழிற்சாலைகள் இங்கு துவக்கப்படுவதற்கான களத்தை பாஜக அரசு உருவாக்குகிறது.

இத்தகைய தொழிற்சாலைகள் உருவாவதற்கு சவாலாக இருக்கும் மேய்ச்சல் நில சார்பு கால்நடை வளர்ப்பு, முடக்கப்படுவதற்காக இத்திட்டங்களை பாஜக அரசு கொண்டு வருகிறது. இறைச்சி ஏற்றுமதிக்கு தடை கொண்டுவராத மோடி அரசு, மாடு விற்பனை சில்லரை முறையில் விற்பனை செய்யப்படுவதை முடக்குகிறது. எவ்வாறு கருப்புப் பண ஒழிப்பு எனும் பெயரில் சில்லரை வர்த்தகமாக நடந்த சிறு வணிகங்கள் முடக்கப்பட்டதோ அதே முறையை கால்நடை வளர்ப்பில் செய்கிறார்கள்.

இதுசமயம் நாம் மற்றொன்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும், மூன்று நாட்களுக்கு முன் பாஜகவின் ‘நிதின் கட்கரி’ உணவு தானியத்திலிருந்து எரிபொருள் தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். கடந்த பாஜக ஆட்சியின் போது அமெரிக்க அரசு உணவு தானியத்திலிருந்து ‘எரிபொருள்’ தயாரிக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இதன்படி மொத்த எரிபொருள் தேவையில் 30% ஐ உணவு தானியங்களில் இருந்து எடுக்க அனுமதி அளித்த பொழுது, உலக அளவில் கடுமையான உணவுப் பஞ்சம் உருவானது. இது இந்தியாவிலும் எதிரொலித்தது. அதே சமயத்தில் இந்தியாவில் அரசு கையிருப்பில் இருந்த தானியங்களை விநியோகம் செய்யாமல் தவிர்த்தது.

கிட்டத்தட்ட சேமிப்பில் மூன்றில் ஒரு பங்கு தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்திய மக்கள் பசியால் இறந்த சமயத்தில் பாஜக-வாஜ்பாய் அரசு தானிய ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. இது குறித்து ராஜஸ்தானில் இருந்த ஒரு தன்னார்வளர் குழு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த பொழுதில் நீதிபதிகள் கையிருப்பில் இருக்கும் தானியங்களை மக்களிடம் விநியோகிக்க உத்தரவிட்டது நினைவில் இருக்கலாம்.

தற்போது மீண்டும் அதே அபாயகரமான மக்கள் விரோத நடவடிக்கைகளை பாஜக பேசுகிறது. எரிபொருள் தயாரிப்பிற்கு தானியம் பயன்படுத்தப்படுமெனில் அது விவசாயிகளுக்கு லாபத்தை ஈட்டித் தரப்போவதில்லை. தனியார் கொள்முதல் நிறுவனங்களோ, தரகர்களோ, ஆன்லைன் வர்த்தகர்களோ, பெரும் லாபம் ஈட்டுவார்கள். இது விவசாயத்தில் ஈடுபடாத பனியா-மார்வாடிகளுக்கு மட்டுமே லாபகரமாகும். மேலும் உணவு தானிய உற்பத்தி குறைந்த இந்த வருடத்தில், தானிய தட்டுப்பாடு ஏற்படும். இந்த தட்டுப்பாட்டை தவிர்க்கிறோம் எனும் பெயரில் மேற்குலகில் இருந்து தானிய இறக்குமதி செய்து உள்நாட்டு உற்பத்தியை மேலும் முடக்க இயலும். வெளிநாட்டிலிருந்து கட்டற்ற தானிய இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை WTO-ல் ஏற்கனவே பாஜக – மோடி அரசு செய்திருக்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் களமிறக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் முடக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடியில் பாஜக கைவிரிக்கிறது. கால்நடை வளர்ப்பு-வணிகம் முடக்கப்படுகிறது. ஆக இவை அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது மாபெரும் அழிவை விவசாயிகள் – கால்நடை வளர்ப்போர் – சிறுவணிகர்கள் – ஏழைகள் தலையில் சுமத்த பெரும் திட்டங்களோடு மோடி அரசு தயாராவதைக் காணலாம்.

இதை தடுக்கும் பணிக்கும், முறியடிக்கும் அரசியலுக்கும் தமிழக இளைஞர்கள் தயாராக வேண்டும். இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் முன்னணியில் நிற்கிறோம். எங்களோடு கைகோர்த்து இப்பாதக செயலை எதிர்கொள்ள முன்வாருங்கள்.

மோடி-பாஜக ஒடுக்குமுறைகள் ஒருபோதும் நம்மை முடக்கிவிடாது. இந்த பேரழிவை நம் மீது திணிக்கும் இந்த கும்பலை விரட்ட ஒன்று திரளுங்கள்.
நாம் வெல்வோம்.

-திருமுருகன்.கா
13-06-2017
புழல் சிறை

Leave a Response