கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு ; சிவகுமார் இரங்கல்..!


பிரபல கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா இன்று காலமானார். திரைத்துறையிலும் தன் முத்திரையைப் பதித்தவர். 1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார். 11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராகவும் நடித்தார். 2009-ல் வெளியான ‘பசங்க’ படத்திலும் “அன்பாலே அழைக்கும் வீடு” என்கிற பாடலைப் பாடியுள்ளார்.

1977-ல் சிவகுமார் நடித்த கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையமைப்பில் இவர் பாடிய ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ பாடல் மிகவும் புகழ்பெற்றது. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகுமார், அவரது நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துகொண்டுள்ளார்..

பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கிதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம் அகில இந்திய அளவில் உயரிய மத்திய அரசு விருதுகளை வாங்கியுள்ளார். அப்படி பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள் ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருவிளையாடல் படத்தில் டி.எஸ்..பாலையா அவர்களுக்கு “ஒரு நாள் போதுமா.. இன்று ஒரு நாள் போதுமா.” என்ற பாடலை பாடினார்.

அந்தப்படம் வெற்றி படமாக ஓடியதற்கு அந்தப்பாடலும் 25% சதவிகிதம் காரணமாக அமைந்தது.. அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் இளையராஜா இசையில் கவிக்குயில் படத்தில் எனக்காக “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” என்கிற பாடலை அவர் பாடினார்.

சிக்மகளூர் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணர், ராதா வேடத்தில் நடிக்க அந்த பாடலை படமாக்கினார்கள். அந்தப்பாடல் தமிழ்சினிமா ரசிகர்கள் அனைவரும் மறக்க முடியாத பாடலாக அமைந்தவிட்டது. அந்த மாமனிதர் எனக்காக பாடினார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.

இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

Leave a Response