சிவகுமார் மீது வழக்குக்கு இதுதான் காரணம் – வெளிப்படுத்தும் அருள்மொழி

திருப்பதி கோயில்குறித்து அவதூறு பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது……

தமிழ்த் திரைப்படத்துறையின் பழம்பெரும் நடிகர் சிவக்குமார், திருப்பதி கோயில் குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வகையில்பேசிய ஒரு காணொலியை தமிழ்மாயன் என்பவர் தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தக் காணொலியை ஆய்வு செய்தோம். சிவக்குமாரின் பேச்சு, உலகம் முழுவதும் உள்ள பல கோடி ஏழுமலையான் பக்தர்களுக்கும் தேவஸ்தானத்தின் பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதால், இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி திருமலை 2-வது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால்,திருமலை காவல்துறையினரின் செயலுக்கு எதிர்ப்புகளும் சிவகுமாருக்கு ஆதரவாகவும் பலர் பேசிவருகிறார்கள்.

சிவகுமாருக்கு ஆதரவாக திராவிடர் கழக வழக்குரைஞர் எழுதியுள்ள பதிவில்…

சிவகுமார் பக்கம் நிற்போம்.

திரை உலகில் சிவகுமார் அவர்கள் மரியாதைக்குரிய மூத்த கலைஞர்.
இலக்கியத்தை அதிகமாக பக்தி சார்ந்து பேசியவர். ஆனாலும் தந்தை பெரியார்மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அதை எப்போதும் வெளிப்படையாகப் பேசியவர்.

சிவகுமார் அவர்களின் மகனும் தமிழ்த் திரைப் படங்களில் புகழ்பெற்ற கதாநாயக நடிகருமான சூர்யா அவர்கள் பல கோடி ரூபாய்களை ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக செலவழித்து வருகிறார்.அந்த அறக்கட்டளைக்கு அகரம் என்று பெயர் வைத்துள்ளார்.

ஏழைகளின் கல்விக்கும் அவர்களது உரிமைக்கும் வேட்டு வைக்கும் நீட் தேர்வையும் , புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து இரண்டு கட்டுரைகள் எழுதினார்.

அது முதற்கொண்டே சிவகுமார் அவர்களும் அவரது குடும்பமும் திட்டமிட்டு காவி வெறி தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அவரது இயல்பான அறிவு சார்ந்த ஆன்மீக்க் கருத்துக்களுக்கு அவரது மருமகளான ஜோதிகாவை இணைத்து ஆபாசப் பதிவுகள் போடப்படுகின்றன.

இதுதான் பாசிசத்தின் ஆதிக்கம். மதவெறியாளர்கள் கையில் ஆட்சி இருந்தால் மக்களின் பேச்சுரிமைக்கு சவப்பெட்டி…இல்லை இல்லை அது சர்ச் சம்மந்தப்பட்டது ,ஆகவே சுடுகாடுதான் போக்கிடம்.

இந்தத் தாக்குதல் எப்போதோ பேசிய இயல்பான விமர்சனங்களை தேடி எடுத்து வழக்கு பதிவு செய்வதில் தொடங்குகிறது. இது இன்னும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். எனவே நாம் சிவகுமார் அவர்கள் பக்கம் நிற்கிறோம் என்பதை உரத்துச் சொல்வோம் .
திரு. சிவகுமார் அவர்களும் அவரது குடும்பத்தினரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response